அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்.. மற்றொரு குற்றவாளி கண்டுபிடிப்பு?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஜன 3) மதுரையில் பாஜக மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தியும், மிளகாய் வற்றல்களை இடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியா அன்புமணி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இக்குழுவினர் மாணவியிடம் நடத்திய விசாரணையின் போது சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாகவும், அவருடன் இருக்குமாறு கூறியதாகவும் மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் ஞானசேகரின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஞானசேகரோடு, அவரது கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஒருவர் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அவரையும் பிடித்து விசாரிக்க புலனாய்வு குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள், மாணவிகள் என நான்கு பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்துள்ளதகாவும், அவர்களிடம் புகார் அளிக்குமாறும் அவர்களை பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?