ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் பாலியல் தொழில்... பிடிபட்ட ஆப்ரிக்க நாட்டு பெண்கள்!
சென்னையில் ஓய்வு பெற்ற டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மணமகள் நகர் பாரதி அவன்யூ பகுதியில் விருந்தினர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த விருந்தினர் விடுதியில் அதிரடியாக கோயம்பேடு போலீசார் சோதனை மேற்கொண்ட போது 9 ஆப்பிரிக்க நாட்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவர்களை விசாரணை செய்ததில் பிடிபட்ட மூன்று ஆண்களும் லொகண்டோ ஆப் மூலமாக இந்த விருந்தினர் விடுதிக்கு வந்ததாகவும் வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 4 கென்ய நாட்டுப் பெண்கள், நான்கு டான்சானிய நாட்டு பெண்கள், ஒரு நைஜீரிய பெண் உட்பட ஒன்பது பேரை போலீசார் மீட்டனர். உல்லாசமாக இருப்பதற்காக வந்த மூன்று பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தரவர்களாக செயல்பட்டது யார்? வெளிநாட்டு பெண்கள் எந்த விசாவில் சென்னையில் தங்கி உள்ளார்கள்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்கி இருக்கும் தனியார் விருந்தினர் விடுதி குறித்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது ஓய்வு பெற்ற டிஐஜி ராமச்சந்திரன் என்பவரது மகன் விக்ரம் என்பவருடையது என தெரியவந்துள்ளது.
அவர் வெளிநாட்டில் இருப்பதால் விக்ரம் தனது நண்பர் அருண் மூலமாக நிர்மலா என்ற இலங்கையை சேர்ந்த பெண்ணிடம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 35 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விட்டதாக தெரியவந்துள்ளது. நிர்மலா இந்த வீட்டை விருந்தினர் விடுதியாக பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களை சோதனை செய்ததில் 23 செல்போன்கள், 8 கிராம் உள்ள ஐந்து கஞ்சா பாக்கெட்டுகள், 31 ஆயிரம் ரூபாய் பணம், 15 ஹூக்கா, அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆப்பிரிக்க பெண்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்டார்களா? அல்லது முறைகேடாக விசாவில் வந்து போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?