மனைவியை லாரி ஏற்றிக் கொன்று கணவன் நாடகம்.. பிளாக் மெயில் செய்தவரும் கொலை
கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள வாகராயம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த விசைத்தறி தொழிலாளி இளங்கோவன். கடந்த 15ஆம் தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்த இளங்கோவன் (42) வீட்டில் இருந்தபோது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இளங்கோவன் மீது மிளகாய் பொடி தூவி விட்டு கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கருமத்தம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட இளங்கோவனுக்கு பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
இளங்கோவன் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் அமிர்தராஜ் மீது இருந்த சந்தேகத்தின் காரணமாக விசாரணை செய்து வந்தனர். இதனிடையே வாகராயம்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனைகளை ஈடுபட்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றனர். இதனை அடுத்து அவர்களை போலீசார் விரட்ட வரும்போது மூவரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் விபத்துக்குள்ளான வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜிக்கு வலது கையில் எலும்பு முறிவும், மைக்கேல் புஷ்பராஜுக்கு வலது காலில் எலும்பு முறிவும், ஆரோக்கியசாமிக்கு இடது காலிலும் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதனை அடுத்து மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் மூவரும் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமிர்தராஜ் வாகரயாம்பாளையம் பகுதியில் தனது மனைவி விஜயலட்சுமிவுடன் வசித்து வந்த நிலையில், இளங்கோவன் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமிர்தராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இதனிடையே அமிர்தராஜுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருடன் தொடர்பு இருந்தது தெரியவர, விஜயலட்சுமி அமிர்தராஜை கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அமிர்தராஜ், தனது மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார். அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு இளங்கோவன் மூலம் ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து லாரியை மனைவி விஜயலட்சுமி மீது ஏற்றி அமிர்தராஜ் தீர்த்துக்கட்டி உள்ளார்.
மேலும், போலீசில் லாரி மோதியதில் மனைவி விஜயலட்சுமி இறந்துவிட்டதாக புகார் அளித்து நாடகமாடியுள்ளார். போலீசார் விபத்து என கருதி இருந்த நிலையில் விஜயலட்சுமியின் பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்தையும் பெற்று கொண்ட அமிர்தராஜ், தனது காதலி கலைவாணியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே விஜயலட்சுமியின் இறப்புக்கு பிறகு வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக அமிர்தராஜின் வீட்டில், தனது குடும்பம், தனது சகோதரன் மற்றும் சகோதரி குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் இளங்கோவன். சரிவர வாடகை கொடுக்காமல் போக்கு கட்டிவந்த இளங்கோவனிடம், ஒரு கட்டத்தில் அமிர்தராஜ் தனது வீட்டை காலி செய்யுமாறு கூற, மனைவியை லாரியை ஏற்றி கொலை செய்தது குறித்து போலீஸிடம் கூறி விடுவேன் எனவும் வீட்டை விற்றால் தனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் இளங்கோவன் மிரட்டியுள்ளார்.
விஜயலட்சுமியின் கொலை பற்றி வெளியில் சொல்லிவிடுவாரோ என அஞ்சிய அமிர்தராஜ், தன் காதலி கலைவாணியுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொடூரமாக கொலை செய்தார். இதனை எடுத்து அமிர்தராஜ், காதலி கலைவாணி மற்றும் மைக்கேல் புஷ்பராஜ், ஆரோக்கியசாமி, வீராசாமி மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் 2019 நடந்த விஜயலட்சுமி கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்யும் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஒரு 17 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
What's Your Reaction?