2019ல் நடந்த கொலைச் சம்பவத்திற்கு அதிரடிதீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Jan 30, 2025 - 10:40
Jan 30, 2025 - 11:21
 0

2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ் வர்ஷினி பிரியா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில் கனகராஜின் அண்ணன் வினோத் சாதியை குறிப்பிட்டு கனகராஜை வெட்டி கொலை செய்தார். அதனை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவிற்கும் அரிவாள் விட்டு விழுந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் வினோத் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கந்தவேல், சின்னராஜ், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் தேதி அன்று வினோத் தவிர இதர மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் குற்றவாளி வினோத்திற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

குற்றவாளி மரண தண்டனை தரும் அளவுக்கான குற்றத்தை செய்து உள்ளதாக குறிப்பிட்டதோடு இந்த ஆணவக் கொலையில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பா.பா.மோகன் வலியுறுத்தினார்.

 அதிகபட்ச தண்டனை வழங்க முகாந்திரம் இருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் இறுதி வாதத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வினோத்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிகுமார், தம்பி மீது உள்ள கோபத்தில் தான் கொலை செய்ய வேண்டும் என்று சென்றாரே தவிர அந்தப் பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செல்லவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை, எனவே அதிகபட்ச தண்டனை வழங்கக் கூடாது என வாதிட்டார்.

வர்ஷணியின் தாயார் அமுதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருகனும், இரட்டை கொலை நடந்து இருப்பதாகவும், சாதி மாறி திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று வாதத்தை முன் வைத்தார். 

இறுதி வாதங்களைக் கேட்ட நீதிபதி விவேகானந்தன், இந்த வழக்கில் குற்றவாளியான வினோத்குமாருக்கு  மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பா. மோகன், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 448 ன் படி வீட்டிற்குள் அத்து மீறி சென்று தாக்கியதற்காக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 இன் கீழ், இரட்டை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக தண்டனை இல்லை என்றும் நீதிபதி தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தான் சரித்திர பூர்வமான ஒரு நிகழ்வாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கு இத்தகைய தீர்ப்பு கிடைத்து இருப்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கிறேன் என கூறினார். 

இந்த தீர்ப்பானது தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்பதற்கு ஏற்ப நடந்த பல்வேறு ஆணவ கொலைகளைப் போன்று, மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு இது பெரிது உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow