பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது போலீசாரை தாக்கி தப்பிச் செல்ல முயற்சித்த திருவேங்கடம் என்ற ரவுடியை தற்காப்புக்காக போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது வரை சுமார் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்தனர்.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் மாமுல் வசூல் செய்து மிரட்டியதாக வந்த புகாரின் பேரில் மாட்டு ராஜா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனியை சேர்ந்த ராஜா என்கிற மாட்டு ராஜா (42) மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணங்களிலும் இவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்புவை தேடி வருவது குறிப்பிடத்தக்கது. ரவுடி மாட்டு ராஜா, அவரது நண்பர் அப்புவின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.