The Goat Movie Review : G.O.A.T எப்படி இருக்குது? ஒரு தடவையாவது பார்க்கலாமா? - கோட் திரைவிமர்சனம்
Actor Vijay The Goat Movie Review Tamil : வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படம் எப்படி? இந்த கூட்டணி வெற்றி பெற்றதா? விஜயகாந்த் ஏஐ காட்சிகள், திரிஷா பாடல், டிஏஜிங் சம்பந்தப்பட்ட சீன்கள், யுவன் பாடல்கள் எப்படி? கோட் வெற்றி படமா? ஆயிரம்கோடி வசூலை அள்ளுமா? இதோ விமர்சனம்
Actor Vijay The Goat Movie Review Tamil : ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சிசவுத்ரி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் g.o.a.t, ஏகப்பட்ட எதிர்பார்ப்பில், எக்கச்சக்க பில்டப்பில் வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்குது?. விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களா? விஜய், வெங்கட்பிரபு காம்போ வெற்றியா? குடும்பத்துடன் நம்பிக்கையுடன் சென்ற பார்க்கலாமா? அல்லது படம் போரடிக்கிறதா? இதோ சுடச்சுட விமர்சனம்.
raw அமைப்பில் தீவிரவாத எதிர்ப்பு பிரிவில்(sats), டில்லியில் ஜெயராம் தலைமையின் கீழ் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் வேலை செய்கிறார்கள். கென்யாவில் நடக்கும் ஒரு ஆபரேசனில்,ஒரு ரயில் சண்டையில் மோகனை கொன்று ஒரு முக்கியமான பொருளை கைப்பற்றுகிறார்கள். கொஞ்ச காலம் கழித்து மனைவி சினேகா, சின்ன வயது மகனுடன் பாங்காக்கில் நடக்கும் இன்னொரு ஆபரேசனுக்கு செல்கிறார் விஜய். அப்போது விஜய் மகன் கடத்தப்படுகிறான். அவனை விஜய் குழு தேடும்போதும் பிணமாக கண்டெடுக்கப்படுகிறான். அங்கேயே சினேகாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அனைவரும் சோகமாகிறார்கள்.
அடுத்து கட் பண்ணினால், 16 ஆண்டுகள் கழித்து சென்னையில் வசிக்கிறது விஜய் குடும்பம். மகன் மறைந்த சோகத்தில் விஜயுடன் பேசாமல் இருக்கிறார் சினேகா. விஜயும் ஏர்போர்ட்டில் வேலை செய்கிறார். அப்போது அலுவல் நிமித்தம் விஜய் மாஸ்கோ செல்ல, அங்கே தன்னை போல இருக்கும் ஜூனியர் விஜயை சந்திக்கிறார். தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்பதை அறிந்து அவனை சென்னைக்கு அழைத்து வருகிறார். அதிலிருந்து பல திருப்பங்கள்,
விஜய் டீமில் இருந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள், வில்லன் தரப்பு ஐபிஎல் மேட்ச் நடக்கும் சென்னை மைதானத்தில் பாம் வைத்து பெரிய சதியை நடத்த முயற்சிக்கிறார்கள். அதற்கும் மகன் விஜய்க்கும் என்ன தொடர்பு, அப்பா விஜய் அதை தடுத்தாரா?. ஐபிஎல் மேட்ச்சில் பாம் வெடித்ததா? என்ன நடந்ததுஎன்பது கிளைமாக்ஸ்
இது, வழக்கமான வெங்கட்பிரபு படம், விஜய், நம் கேள்விப்பட்ட நடிகர்கள் தவிர, ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். ஒரு சீன் போராடிக்கும்போது புதுசாக ஒரு கேரக்டர் வந்து போகிறது. அந்த வகையில் படம் ஓரளவு நிறைவு. 16 ஆண்டுகளுக்குமுன்பு இளமையான கேரக்டர், சற்றே வயதான கேரக்டர், துறுதுறுவென இருக்கும் மகன் கேரக்டர், இன்னும் கொஞ்சம் சர்ப்பிரைஸ் என வெரைட்டியாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளுகிறார் விஜய். ஆனாலும், அந்த மகன் கேரக்டரில் செயற்கைதனம் எட்டி பார்க்கிறது. இன்னும் நேர்த்தியாக டீஏஜிங் செய்து இருக்கலாம்.
சில சமயம் மகன் கேரக்டரின் ஓவர் ஆக்டிங், டயலாக் மைனஸ் ஆக அமைகிறது. விஜய் படங்களில் பாடல், டான்ஸ் சூப்பராக இருக்கும். இதில் அதெல்லாம் சுமார். விஜய் நண்பர்களாக வரும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோரும், ஜெயராமும் ஓரளவு நன்றாக நடித்து இருக்கிறார்கள். அவர்களின் கேரக்டரிலும் மாற்றங்கள் இருப்பது நல்ல திரைக்கதை. விஜய் மனைவியாக சினேகா, பிரசாந்த் மனைவியாக லைலா, ஜூனியர் விஜய் காதலியாக மீனாட்சி வருகிறார்கள். ஒரு பாடலுக்கு திரிஷா ஆகியிருக்கிறார். ஆனாலும், கலர்புல் காட்சிகள், கமர்ஷியல் சீன்கள் அதிகம் இல்லாதது குறை. வில்லனாக மோகன் வருகிறார். அவர் கெட்டப், நடிப்பு ஓகே. ஆனாலும் இன்னும் அவரை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம். சினேகாவுக்கு ஒரளவு சீன்கள் இருக்கிறது. லைலா வந்துபோகிறார்.யோகிபாபு, பிரேம்ஜி இருந்தும் சிரிப்பு இல்லை. ஜூனியர் விஜய்க்கு காதல் சீன் இருந்தும் அதில் சுவாரஸ்யம் இல்லை.
படத்தின் நீளம் பெரிய மைனஸ், முதற்பாதியில் பல இடங்களில் நெளிய வைக்கிறார்கள், இரண்டாம்பாதியில் பல சீ்ன்கள் போராடிக்கிறது. கொஞ்சம் யோசிக்காமல் அரை மணி நேர சீன்களை வெட்டினால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். அப்பா, மகன் போட்டி, சண்டை, திருப்பங்கள்தான் படத்தின் கதை. ஆனாலும் அதை அழுத்தமாக சொல்லவில்லை இயக்குனர். அடுத்து இந்த சீன் நடக்கப்போகிறது.அவர் இவர்தான் என்று பார்வையாளர்கள் எளிதாக புரிந்துகொள்கிறார்கள். அதில் கவனம் செலுத்தவில்லை வெங்கட்பிரபு. குறிப்பாக, யுவனின் பாடல்கள் ரொம்ப சுமார். திரிஷா சாங் பிரமாதமாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்தால் அவரும் வழக்கம்போல் வந்து ஆடிவிட்டு செல்கிறார். வரிகள் கூட மனதில் நிற்கவில்லை. படத்தில் இரண்டு இடத்தில் இளையராஜா பாடல்கள் வருகிறது. அது எவ்வளவு ரம்யமாக இருக்கிறது. அட போங்க யுவன்.
கோட் படத்தில் பெரிதும் எதிர்பார்த்தது விஜயகாந்த் கேரக்டர்தான். அவர் எப்படி வரப்போகிறார், எவ்வளவு நேரம் வரப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், விஜயகாந்த் காட்சி ஒட்டு மொத்த ஏமாற்றம். அவர் வரும் காட்சிகள், அவரை ஏஐ மூலம் கொண்டு வந்தது ஒட்டவில்லை. அருமையான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் வெங்கட்பிரபு. உங்களை விஜயகாந்த் ரசிகர்கள் சாபம் சும்மா விடாது. அதேசமயம், ஆங்காங்கே போராடிக்கும்போது ஒரு திருப்பம், ஒரு பரபரப்பு என திரைக்கதையை சமாளித்து இருக்கிறார். சில ஆக் ஷன் சீன்கள் ஓகே. மாஸ்கோ சண்டை காட்சியும் சப்பென முடிந்துவிடுகிறது. சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் அந்த கிளைமாக்ஸ் சூப்பர். கிரிக்கெட்மேட்ச், தோனியுடன், கிளைமாக்சை இணைத்து இருப்பது நச். குறிப்பாக, அப்போது ஒரு காட்சியில் வரும் சிவகார்த்திகேயன், அவர் பேசும் டயலாக் கைதட்டல். தனக்குபின் சிவகார்த்திகேயன் என்று அந்த காட்சி மூலம் சொல்லாமல் சொல்கிறாரா விஜய்?
பல படங்களின் சாயல், பல படங்களின் சீன்கள் இருப்பதும், புதுசாக பல சீன்கள் இல்லாததும். கதை இழுப்பதும் ஏமாற்றம். படத்தில் அரசியல் வாடை, பெரியளவில் பன்ச் டயலாக் இல்லை. விஜய் ரசிகர்களுக்கு கூட பல இடங்களில் சலிப்பு, கோபம் வரலாம். விஜய் படங்கள், அவர் நடிப்பு குழந்தைகளுக்குபிடிக்கும் இதில் அதுவும் மிஸ்சிங். ஆனாலும் ஓட்டு மொத்தமாக பார்த்தால் ஓகே. ஒரு தடவை கோட் படத்தை பார்க்கலாம். அடுத்து சில வாரங்கள் பெரிய படங்கள் இல்லாததால் கோட் வெற்றி, இத்தனை கோடி வசூல், இப்படியொரு சாதனை என்று படக்குழு சொல்லலாம். ஆனாலும், விஜய், வெங்கட்பிரபு சினிமா வாழ்க்கையில் g.o.a.t ஒரு ஆவரேஜ் படம்தான்
ரேட்டிங் 3.5/5
**
What's Your Reaction?