கோவில் திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டம்... சாமி தரிசனம்..!
மேலூர் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி கிராமத்தில் உள்ள வல்லடிகாரர் கோவில் மாசி திருவிழாவில் இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலூர் அருகே 62 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய வல்லடிகாரர் சுவாமி கோவில் அம்பலகாரன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் மாசித் திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வெள்ளலூர், உறங்கான்பட்டி, பழையூர்பட்டி, கோட்டநத்தம்பட்டி, நாயத்தான்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தின் போது பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வல்லடிகாரர் புகழை பாடியும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணி ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முன்னதாக தேரில் எழுந்தருளிய பூர்ணகலா மற்றும் பொற்கலை அம்பாளுடன் சமேதராக எழுந்தருளிய வல்லடிகாரருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.
What's Your Reaction?






