ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்
இந்தியாவிலேயே நான்காவது இடமாக திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு ஸ்ரீசௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தர்ப்பண கோஷ்டம் திறப்பு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஸ்ரீ சௌந்தர ராஜ பெருமாள் , சமேத ஸ்ரீதேவி பூதேவி திருக்கோயிலில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தர்ப்பண கோஷ்டம் என்னும் கண்ணாடி அறை அமைக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது.
விழாவில் உற்சவ சுவாமிகளான ஸ்ரீ சௌந்தர ராஜ பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் கும்பம் வைத்து பட்டாச்சாரியர்களால் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கும்பத்தில் இருந்த புனித நீர் கண்ணாடி அறை முழுதும் தெளித்து கண்ணாடி அறை திறக்கப்பட்டது. பின்னர் உற்சவ மூர்த்திகளை தர்ப்பண கோஷ்டத்தில் அமைக்கப்பட்ட பீடத்தில் வைத்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
அரை மூன்று பக்கமும் கண்ணாடிகளால் அமைக்கப்பட்டதால் எந்த பக்கம் பார்த்தாலும் சுவாமிகளின் திரு உருவம் காணும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது
தர்ப்பண கோஷ்டமானது இதற்கு முன்பு திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் அமைந்துள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது தாடிக்கொம்பு ஸ்ரீ சௌந்தர ராஜ பெருமாள் கோயில் நான்காவதாக அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?






