திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

Nov 7, 2024 - 08:20
 0
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா கோலாகலம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா கோலாகலம்!

முருகப்பெருமானுக்குரிய மிக முக்கிய விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மாதம் தோறும் சஷ்டி திதி வருவதுண்டு. ஆனால் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதி சிறப்புடையது. பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக உற்சவ மூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமி சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், சீயக்காய், தயிர். பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து உற்சவமூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமி -  தெய்வானைக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியம் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முக நாதருக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கோயில் சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி ஆறு நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். 

தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகார்ச்சனை நடைபெற்று வந்தது. உற்சவர் சுப்பிர மணியசாமி-தெய்வானை அம்மன் தினமும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் விழாவின் உச்ச நிகழ்ச்சியான  சூரசம்காரம் நாளை (நவ. 07) நடைபெறுவதை முன்னிட்டு சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிக்கையிடமிருந்து வேல் வாங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவர்த்தனாம்பிகை சுப்ரமணிய சுவாமி மலர் மாலைகளாலும் தங்க வைர நகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினர். தொடர்ந்து மூலவர் சன்னதியில் இருந்து கோயில் ஸ்தானிகபட்டர் வைர கற்கள் பதிக்கப்பட்ட வேலை பக்தர்களின் அரோக கோஷம் முழங்க சகல பரிவாரங்களோடு கையில் ஏந்தி வந்தார். 

பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தாய் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகிழ்ச்சியான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு சன்னதி தெருவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow