சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sep 17, 2024 - 07:04
 0
சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை..  லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!
Sub Registrar Office

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும்  சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

சில சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. நேற்று முகூர்த்த நாள் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு அதிகமாக நடந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். 

விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், கடலூர் கடம்புலியூர், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் குடியாத்தம், திருவள்ளூர்  உள்பட சுமார் 30க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அங்கு பணிகள் நடந்து கொண்டிக்கும்போது அதிரடியாக நுழைந்த போலீசார், சார்பதிவாளர் அலுவலகங்களை பூட்டி விட்டு சோதனை நடத்தினார்கள். அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அங்கு இருந்த மக்களிடமும் சோதனை நடத்தினார்கள். 

அப்போது கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின்போது விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 94,570ஐ லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 2,63,000, கடலூர் கடம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 2,17,000, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 3,71,840, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 43,620, திருவள்ளுவர் சார் பதிவிளர் அலுவலகத்தில் ரூ. 2,03,280 ஆகிய கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். இந்த 6 அலுவலகங்களிலும் மொத்தமாக ரூ.11,93,310 கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழியகள் பணத்தை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசினார்கள். சிலர் டிபன் பாக்ஸ்களிலும், மற்ற இடங்களிலும் பணத்தை மறைத்துள்ளனர். ஆனால் காவல் அதிகாரிகள் அதனையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.  நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow