இந்திய விமான படையின் 92 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த நிலையில், முக்கிய சாலைகள் உட்பட பொதுப் போக்குவரத்துகளும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து போனது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமான சாகசத்தை கண்டு களிக்க பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், காலை முதலே வர தொடங்கியதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் வாகனங்களை நகர முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து சில ஏற்பட்டது.
வான்சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பிறகு சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக பொது மக்கள் சாரை சாரையாக வெளியேறினர். இதனால் அண்ணா சதுரங்கம் பேருந்து நிலையம், தேனாம்பேட்டை மெட்ரோ, ஓமந்தூரார் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையம் என இப்பகுதியில் மக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து மற்றும் சாலையில் மக்கள் தேங்கி நிற்கும் நிலையில் இருந்தது.
குறிப்பாக விமானப்படை சார்பில் வான்சாகச நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மூன்று லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினாவை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், திமுக சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பவள விழா பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இது குறித்து கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி, “வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். இருந்தாலும் தமிழ்நாடு அரசின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி சிலரின் அஜாக்கிரதை காரணமாக இது நிகழ்ந்திருக்கிறது
15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்லுகிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும். இந்த இழப்புக்கு என்ன இழப்பீடு என்பதை முதலமைச்சர் தெரிவிப்பார். முன் கூட்டியே முன்னெச்சரிக்கை பொதுமக்களுக்கு தரப்பட்டிருக்கிறது.
2017 இல் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் கட்சி கூட்டத்தில் 6 பேர் இறந்திருக்கக் கூடிய செய்தி இருக்கிறது. அதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி. மறந்துவிடக்கூடாது இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. அதிமுக பேசுவதற்கு எதுவும் கிடையாது. எவ்வாறு இறந்தார்கள் என்பதை ஆராய வேண்டும்.