இது மட்டும் நடந்தால்.. மது ஒழிப்புக்கு புது ஐடியா கொடுத்த காங்கிரஸ் எம்.பி.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும் என காமராஜர் நினைவு இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் காமராசர் நினைவு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தை ஒட்டி காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள உருவச் சிலை மற்றும் ரயில்வே ஜங்ஷனில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “கர்நாடகா முதல்வர் சீதாராமையா மீது போடப்பட்டுள்ள வழக்கு பாஜக செய்த சதி. இந்த வழக்கு என்பது பிற்படுத்தப்பட்ட தலைவரான சித்தராமையாவை அவமானப்படுத்துவதற்கும், அவரது அரசியல் வாழ்விலே பொய்யான குற்றச்சாட்டை அமலாக்க துறையை வைத்து பாஜக மத்திய அரசு புனைந்த வழக்கின் விளைவாக வந்த பிரச்சனை. இந்த வழக்கை சட்டரீதியாக காங்கிரஸ் கட்சியும், சித்தராமையாவும் எதிர்கொள்ளும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்ற அரசாக செயல்படுகிறது. குறிப்பிட்ட வகையிலே ஒரு மாநிலத்தை சேர்ந்த இந்திய அளவில் தொழில் செய்கின்றவர்கள் மாநில அரசு சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன.
சட்ட விரோத பண பரிவர்த்தனை விவகாரத்தில் மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் தொடர்ந்து இதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக தான் தெரிகிறது. சட்ட பரிவர்த்தனை கண்காணிக்க கூடிய அதிகாரிகளும் எதிர்க்கட்சிகள் மீது பாய்வதிலேயே குறியாக இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மது இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும். இப்போது திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. மது ஒழிப்பு கொள்கை காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாக இருந்து வருகிறது. அரசியல் பலம் என்பது வேறு கொள்கை ஈடுபாடு என்பது வேறு.
அரசியல் பலத்தைப் பொறுத்த வரையிலே மக்களுடைய எண்ணங்கள் எப்பொழுது மாறுகின்றதோ, எங்களது கொள்கைகளை எப்போது புரிந்து கொள்கிறார்களோ அப்போது மீண்டும் மதுவிலக்கு கொள்கையை கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கின்றன.
மோடியின் வன்மம் தெரிகிறது. மத்திய பாஜக அரசு தமிழகத்தின் மீது பாராமுகமாக இருந்து வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது மோடியின் முகமாக இருக்கிறது. வெளி வேஷம் போடுவதில் மோடி அரசு அதிகமாக காட்டுகிறது. உண்மையிலேயே தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் தொடர்ந்து காட்டி வருகிறது.
மத்திய அரசு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்தாலும் அதை நிறைவேற்றுவதற்கான போதிய உறுப்பினர்கள் பாஜகவிடம் இல்லை. எனவே தீர்மானம் நிலை குழுவுக்கு செல்லுமே தவிர மசோதா நிறைவேறாது.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பாஜகவின் ஊது குரலாக இருந்து வருகிறார். பாஜக என்ன மத அரசியலை செய்ய விரும்புகிறதோ அதை பவன் கல்யாண் செய்ய விரும்புகிறார். இதை ஆந்திர மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்தார்.
What's Your Reaction?