'அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது'.. ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கில் அமைச்சர் சாமிநாதன் புகழாரம்!
''10 ஆண்டுகளுக்கு முன்பு சமவெளியில் மிளகு சாத்தியம் என்று சொன்னோம். பலர் அதனைக் கேட்டு சிரித்தனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பயிற்சிகளை நடத்தினோம். இப்போது தமிழகத்தில் 37 மாவட்டத்திலும் மிளகை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதைப் போலவே சமவெளியில் ஜாதிக்காயை சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற முன்னெடுப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்'' என்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறினார்.
திருப்பூர்: ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு தாராபுரத்தில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் 'அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது' என்று கருத்தரங்கை வாழ்த்திப் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இக்கருத்தரங்கில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர், ''இது கருத்தரங்கா இல்லை மாநாடா என்கிற வகையில் இந்த நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது. கூட்டம் மட்டும் பெரிதல்ல; இந்த அமைப்பின் நோக்கமும் பெரிதாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி 'மக்கள் மரங்களை வளர்த்தால், மரங்கள் மக்களை பாதுகாக்கும்' என்றார்.
அப்படிப்பட்ட மரங்கள் சுற்றுச்சுழலை காப்பது மட்டுமின்றி விவசாயிகளையின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது. அதற்கு ஏதுவாக மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது காவேரி கூக்குரல் இயக்கம். அரசு செய்ய வேண்டிய பணியை ஈஷாவின் காவேரி கூக்குரல் செய்வது மிகுந்த பாராட்டுகுரியது'' எனப் பேசினார்.
அதோடு அமைச்சர் சாமிநாதன் எழுதிய 'தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு' கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் வரவேற்புரை வழங்கினார்.
அப்போது இப்பயிற்சி கருத்தரங்கின் நோக்கம் குறித்து அவர் பேசுகையில் ''10 ஆண்டுகளுக்கு முன்பு சமவெளியில் மிளகு சாத்தியம் என்று சொன்னோம். பலர் அதனைக் கேட்டு சிரித்தனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பயிற்சிகளை நடத்தினோம். இப்போது தமிழகத்தில் 37 மாவட்டத்திலும் மிளகை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதைப் போலவே சமவெளியில் ஜாதிக்காயை சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற முன்னெடுப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்''எனக் கூறினார்.
மேலும் இவ்விழாவில் கோழிக்கோடு IISR விஞ்ஞானி முகமது நிசார் சமவெளியில் ஜாதிக்காய் விவசாயம் குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் ஜாதிக்காய் ரகங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து, பெங்களூர் IIHR விஞ்ஞானி செந்தில்குமார் 'சமவெளியில் அவகோடா சாத்தியமே' என்பது குறித்து உரையாற்றினார்.
பின்னர் கோழிக்கோடு IISR விஞ்ஞானி முகமது பைசல் பீர்ரன் “ஜாதிக்காய் மதிப்புக்கூட்டல் மற்றும் மரவாசனைப் பயிர்களின் நோயும் அவற்றிற்கான தீர்வுகள்” குறித்தும் உரையாற்றினார் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பாலமோகன் சமவெளியில் ஜாதிக்காயை சாத்தியப்படுத்துவதற்கான விஞ்ஞான விளக்கத்தை வழங்கினார்.
மேலும் Spices Board சந்தைப்படுத்துதல் துணை இயக்குனர் மணிகண்டன் 'ஜாதிக்காயின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விற்பனை வாய்ப்புகள்' குறித்து பேசினார். போடிநாயக்கனூர் இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் உதவி இயக்குனர் செந்தில் குமார் “மரவாசனைப் பயிர்களான இலவங்கப்பட்டை, கிராம்பு சர்வ சுகந்தி ஆகியவற்றின் சந்தை வாய்ப்புகள்” குறித்து பேசினார்.
இதுமட்டுமின்றி சமவெளியில் மரவாசனை பயிர்களை வெற்றிகரமாக விளைவித்து வரும் முன்னோடி விவசாயிகளான தாராபுரம் ஆறுமுகம், திண்டுக்கல், ரசூல் மைதீன், கோபி தஷிணா மூர்த்தி, பொள்ளாச்சி வள்ளுவன், சித்தூர் ராதாகிருஷ்ணன், பாலக்காடு ஞான சரவணன், திருச்சூர் சொப்னா, ஆழியாறு டாக்டர். மூர்த்தி, அர்சிகரே திரு. ஹெச். கே மஞ்சுநாத், ஐதராபாத் டாக்டர். சீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சமாக இக்கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சமவெளியில் மரவாசனை பயிர்களை சாகுபடி செய்ய உதவும் 'வழிகாட்டி புத்தகம்' வழங்கப்பட்டது. இதில் மரவாசனை பயிர்களின் ரகங்கள், மகசூல் விவரங்கள், நடவு முறைகள், நீர் மேலாண்மை ஆகிய பல்வேறு தகவல்கள் இடம்பெற்று இருந்தது. மேலும் குறைவான விலையில் மரவாசனை பயிர்கள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.
காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ சத்குருவால் 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வியக்கம் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கோடிக்கணக்கான மரங்கள் நட திட்டமிடப்பட்டது. அதிகளவில் மரங்கள் நடுவதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிக்கும் திறனும் மேம்படும். இதனால் மழைக் காலங்களில் பொழியும் மழையானது மண்ணில் அதிகளவு சேகரிக்கப்படும். இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, காவேரியின் கிளை நதிகளையும், காவேரியையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்.
சுற்றுச்சூழல் நோக்கத்தோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வியக்கம், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக மர வாசனை பயிர்கள் குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?