மழைக்கால நோய்கள் ~ தற்காத்துக் கொள்வது எப்படி?

வாகனங்களில் பயணம் செய்யும்போது குளிர்காற்று முகத்தின் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் bell's palsy முகவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Sep 2, 2024 - 19:21
Sep 3, 2024 - 18:23
 0
மழைக்கால நோய்கள் ~  தற்காத்துக் கொள்வது எப்படி?
மழைக்கால நோய்கள்

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவிருக்கிறது. மற்ற பருவங்களைக் காட்டிலும் மழைக்காலத்தில் நோய்த்தொற்று மிகுதியாக இருக்கும் என்பதால் நமது உடல் நலம் சார்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து கிருமிகள் உற்பத்தியாகி தாக்கும் அபாயம் இருக்கிறது. எதிர்கொள்ளவிருக்கும் மழைக்காலத்தை நாம் அதற்கான விழிப்புணர்வுடன் எதிர்கொள்வோம். மழைக்காலத்தில் எந்தெந்த நோய்களுக்கெல்லாம் நாம் ஆளாக நேரிடலாம் என்பது குறித்தும் அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் விளக்குகிறார் பொது நல மருத்துவர் அருணாச்சலம்... 

‘‘தட்பவெப்பநிலைதான் வெயில் காலத்துக்கும் மழைக்காலத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு. தட்பவெப்பநிலை 24 டிகிரிக்கும் குறையும்போது உடலை சூடாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குளிர்ச்சியின் காரணமாக பல பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். மழைக்காலத்தில் சுற்றுப்புறத்துடன் தொடர்புடைய சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாவோம். குளிர்காற்றை சுவாசிக்கும்போது மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகள் உயிர்பெற்று விடும். இதன் காரணமாக மூக்கடைப்பு, தொண்டைச்சளி ஆகியவை ஏற்படும். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் வைரஸ் போன்ற கிருமிகள் எளிதில் பரவும். சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டைவலி, கண் வியாதிகள் என பலவற்றுக்குமான கிருமிகள் காற்றின் வழியே பரவும். மூக்கடைப்பு, சளி ஆகியவை இரண்டு நாட்கள் நீடித்தாலே மருத்துவரை அணுக வேண்டும். சளிப்பிரச்னையை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது தொண்டை, நெஞ்சுப்பகுதி என பல உறுப்புகளுக்குச் சென்று நிமோனியா காய்ச்சல் வரை கொண்டு சென்று விடும். நிமோனியா காய்ச்சலுக்கு சுற்றுப்புறம் மட்டும் காரணமல்ல. நம் உடலில் இருக்கும் கிருமிகள் வலுப்பெறவதாலும் ஏற்படுகிறது. நிமோனியா போன்ற அபாயகரமான காய்ச்சலுக்க ஆளானவர்களைத் தனிமைப்படுத்துவது நல்லது. ஏனென்றால் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாதபடி தடுக்க முடியும்.

வாகனங்களில் பயணிக்கும்போது தூசி, நெடி, புகை ஆகியவை சுவாசக்குழாய்க்குச் செல்லாத அளவுக்கு முகத்தை மூடிக்கொள்வது நல்லது. ஏனென்றால் அதன் காரணமாக ஆஸ்துமா ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. குளிரை உணர்ந்தவுடனேயே வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து விட வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் ஏ.சி பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. ப்ரிட்ஜில் வைத்த உணவுகளை சூடுபடுத்தாமல் சாப்பிடக் கூடாது. மழைக்காலத்தில் தண்ணீர் குறைந்த அளவே குடிப்பர். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும். உணவில் ஒரு காயையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும். உடல் குளிரை உணர்ந்தால் வெப்பநிலையை சமப்படுத்த சூடாக தேநீர் அருந்தலாம். குளிர்புகா வண்ணம் ஆயத்த உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வாகனங்களில் பயணம் செய்யும்போது குளிர்காற்று முகத்தின் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் bell's palsy முகவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’’ என்று தெளிவாக விளக்கினார் அருணாச்சலம்.

மழைக்காலத்தில் ஏற்படும் கிருமித்தொற்று மற்றும் தொற்றுநோய்களிலேயே அதிதீவிர விளைவுகளை ஏற்படுத்தும் நோய் குறித்து விளக்குகிறார் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியம் சாமிநாதன்.. 

மழையால் கலப்புகளுக்கு ஆளான தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் நேரடியானவை. நன்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக் குடிப்பதால் வாந்திபேதி, சீதபேதி, காலரா, டைப்பாய்டு, ஹெப்படைடிஸ் ஏ, ஈ ஆகியவை பரவுகின்றன. எலியின் சிறுநீர் கலந்த நீரில் கால் வைத்தாலே எலிக்காய்ச்சல் ஏற்படும். மேலும் மழைநீரில் நடப்பதால் பூஞ்சைத்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. சுற்றுப்புறத்தில் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் ஏற்படும் பிரச்னைகள் மறைமுகமானவை. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல் என பல விதமான வியாதிகள் கொசுவால் பரவுகின்றன.

ஆப்பிரிக்காவில் பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய எபோலா வைரஸ் போல் கொடூர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது ஹண்டா வைரஸ் மழைக்காலத்தில் பரவுகிறது. ரத்தக்கசிவை ஏற்படுத்தி, உறுப்புகளைச் செயலிழக்க வைக்கும் தன்மை இந்நோய்க்கு உள்ளது. இந்தியாவில் இது அதிகமாகப் பரவி வருகிறது. ஆந்திராவின் கடற்கரையோர கிராமங்களில் ஹண்டா வைரஸ் தாக்குதலுக்கு பலரும் ஆளாகியிருக்கின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழையின்போதே தமிழகத்தில் பலரும் meliod என்னும் காய்ச்சல் கிருமியின் தாக்குதலுக்கு ஆளாகினர். மண்ணுக்குள் இருக்கும் அக்கிருமி மழைக்காலத்தில் மேலெழும்பிப் பரவுகிறது. இக்காய்ச்சலுக்கு ஆளாகிறவர்களில் மூன்றில் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். இவை எதனால் ஏற்படுகின்றன என்கிற காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது மட்டுமே தீர்வாக அமையும்’’ என்கிறார் சுப்ரமணியன் சாமிநாதன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow