நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - சேலம் மேம்பாலத்தின் கீழ் தனியார் மருத்துவமனையின் காலாவதியான மருந்து பாட்டில்கள், மாத்திரைகள் போன்ற மருத்துவ கழிவு குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தை பயன்படுத்தி சில தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் பலர் இரவு நேரத்தில் அங்கு காலாவதியான மருந்துகளை கொட்டுவதாக கூறப்படுகிறது.
மேலும் கொட்டப்படும் மருந்துகளை ஊழியர்கள் அவ்விடத்தில் எரித்து விடுவதால் அவ்வப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் மற்றும் தலைமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், கொட்டப்பட்ட மாத்திரைகள் காய்ச்சல், சளி மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் என்பது தெரிய வந்துள்ளது .
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொட்டிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மொத்த மருந்து விற்பனையாளரான செந்தில் குமார் என்பவர் மேம்பாலத்தின் கீழ் மருத்துவக் கழிவுகளை கொட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.மேலும் இதுபோன்று பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை வீசக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அவரிடம் இது போன்ற தவறை இனி செய்ய மாட்டேன் என கடிதம் பெற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை நெல்லையில் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், மருத்துவக் கழிவுகள் மக்களுக்கு தீங்கு விளைக்கும் என்பதால் இந்த பிரச்சனையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.