SP Balasubrahmanyam Salai : சென்னையில் எஸ்.பி.பி பெயரில் சாலை.. நினைவு நாளில் கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Announced SP Balasubrahmanyam Salai : சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
CM Stalin Announced SP Balasubrahmanyam Salai : இந்திய திரையிசையில் மிகப்பெரும் ஜாம்பவான் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். ரசிகர்களால் ‘காந்தக் குரலோன்’,’பாடும் நிலா’என கொண்டாடப்படும் எஸ்.பி பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். எஸ்.பி.யின் குரலை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இல்லை எனலாம்.
தமிழில் இசைஞானி இளையராஜா – எஸ்.பி.பி கூட்டணி ஒரு இசை ராஜாங்கமே நடத்தியுள்ளது. இதேபோல் எஸ்பிபி – ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான பாடல்களும் எக்காலத்துக்கும் நமது மனதில் நிற்கும். எஸ்.பி பாலசுப்ரமணியம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிகர் சிவாஜி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், அஜித், விஜய் என நான்கு தலைமுறை நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் தேசிய விருதுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்துள்ளார்.
பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பன்முக முகம் கொண்ட எஸ்பிபி, கடந்த 2020 ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். எஸ்பிபியின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’(SP Balasubrahmanyam Salai) என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் “நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து அவர்களின் மாறா அன்பை பெற்றவர் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம். அவரது நினைவை போற்றும் வகையில், எஸ்பிபி இறுதி மூச்சு வரையில், நீண்ட காலம் வாழ்ந்த சென்னையில் உள்ள காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியை எஸ்பி பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்யுமாறு, அவருடைய ரசிகள் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும், என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், எஸ்.பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவுக்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை(SP Balasubrahmanyam Salai) என பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். அதாவது எஸ்.பி.பி. வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு ‘எஸ்.பி.பி. சாலை’ என பெயர் வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பியின் நினைவை போற்றும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், பாடும் நிலா SP Balasubrahmanyam நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு ’எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’(SP Balasubrahmanyam Salai)எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பால் எஸ்.பி.பி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?