Vellaiyan : வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்.. 2 நாட்கள் கடையடைப்பு
T Vellaiyan Passed Away in Chennai : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்றுக் காரணமாக காலமானார். 2 நாட்கள் கடைகளை அடைத்து துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

T Vellaiyan Passed Away in Chennai : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76) நுரையீரல் தொற்று காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட த.வெள்ளையனை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை 03.00 மணியளவில் உயிரிழந்தார்.
ஏற்கனவே மூளையில் ரத்தக் கசிவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து மீண்டு தேறி வந்த நிலையில், தற்போது நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. த.வெள்ளையன் வணிகர்களின் தலைவராக மட்டும் அல்லாமல், பொதுவில் மக்கள் நலன் சார்ந்து இயங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம், விவசாயம், நெசவு, குறு சிறு தொழில்கள் போன்றவற்றில், அந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார். சமீபத்தில், திருநெல்வேலியில் கடந்த மே 5-ஆம் தேதி கூட, சுதேசி பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் 31வது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருந்தார்.
வெள்ளையன் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் இரண்டு நாட்கள் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் அடைத்து துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






