தீவிரமான இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்ட ஃபெஞ்சல்.. தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு
ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை அரசிதழ் வெளியிட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனிடையே வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவானது. இந்த புயலானது நவம்பர் 30-ஆம் தேதி மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வழக்கத்தை விட மழையின் அளவு மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பான்மையான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அதுமட்டுமல்லாமல், பல பகுதிகளில் சாலைகள், ரயில் தண்டவாளங்கள், மின்சார கம்பங்கள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் விமான நிலையம் மூடப்பட்டது. வருகை மற்றும் புறப்பாடு என 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பல பகுதிகளில் காவல்நிலையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை அதிக காற்றினால் சாலையில் சாய்ந்து விழுந்தது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பலர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் , விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனிடையே, ஃபெஞ்சல் தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ஆறாயிரத்து 675 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை அரசிதழ் வெளியிட்டு உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?