சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.. காரணம் இதுதான்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dec 31, 2024 - 14:54
 0
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.. காரணம் இதுதான்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியது.

சித்ராவின் காதலர் ஹேம்நாத் துன்புறுத்தலின் பேரில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஹேம்நாத் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தனக்கும் சித்ராவிற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரது தற்கொலைக்கு தான் காரணம் இல்லை என ஹேம்நாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சித்ரா தற்கொலை தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறை தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஹேம்நாத்தை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் இன்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காமராஜ் தனது மகள் சித்ராவின் இறப்பிற்கு பிறகு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, சித்ரா தற்கொலை வழக்கில்  ஹேம்நாத் விடுதலை ஆனதிலிருந்து சரியான முறையில் உணவை உட்கொள்ளாமல் உடல் நல குறைவு ஏற்பட்டு இருந்துள்ளார்.

வழக்கமாக தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழக்கூடிய காமராஜ்  காலை 7 மணி வரை எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி விஜயா அறையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, காமராஜ், சித்ராவின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நான்கு வருடங்களாக தனது வயதையும் பொருட்படுத்தாமல் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டி போராடி வந்த காமராஜ் துக்கம் தாளாமல் மகளின் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow