தமிழ்நாடு

பட்டியலின சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்... நெல்லையில் தலைவிரித்தாடும் சாதி வெறி...

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய (வெட்டிய) சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பட்டியலின சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்... நெல்லையில் தலைவிரித்தாடும் சாதி வெறி...
பட்டியலின சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்... நெல்லையில் தலைவிரித்தாடும் சாதி வெறி...

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ. 04) மாலை கல்லூரி முடிந்து தனது வீட்டிற்கு அச்சிறுவன் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கார் ஒன்று சிறுவன் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த சிறுவன், காருக்குள் இருந்த நபர்களிடம், “மெதுவாக வர மாட்டீர்களா? இவ்வளவு வேகமாக வரலாமா?” என சிறிது கோபத்துடன் கேட்டுள்ளார். ஒரு பட்டியலினத்தை சேர்ந்த சிறுவன் நம்மையே கேள்வி கேட்பதா? என ஆத்திரமடைந்த அந்த காருக்குள் இருந்த 4 நபர்கள் சிறுவனிடம் சண்டைக்கு சென்றுள்ளனர். ஆனால் அருகிலிருந்தவர்கள் அனைவரையும் சமாதனப்படுத்தி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 

இருந்தும் ஆத்திரம் தணியாத அந்த ஆதிக்க சாதியை சேர்ந்த 4 நபர்கள், சிறுவனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அருவாளாலும் மதுபாட்டிலாலும் சிறுவனை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். தலைப்பகுதி, கைப்பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் அச்சிறுவன். இதுமட்டுமில்லாமல், ஆத்திரம் அடங்காத அந்த நபர்கள் வீட்டுக்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தி வீட்டையும் ஒட்டுமொத்தமாக சூரையாடினர். மேலும் சாலையில் நின்றுகொண்டிருந்த பட்டியலின மக்களையும் சாதிப் பெயர் கூறி அவதூறாகப் பேசியதோடு அருவாளைக் காட்டி மிரட்டியும் சென்றுள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பதற்றத்துடன் ஓடி வந்த சிறுவனின் பெற்றோர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்களது மகனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் 10 பேர் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் அவர்கள் மீது பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, பொருட்களை சேதப்படுத்துதல் ஜாதி ரீதியாக திட்டுதல், அவதூறான வார்த்தைகளை பேசுதல் ,உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

191, 296, 381, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறியும் மாணவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் குறிப்பிட்ட ஏழு நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 10 நிமிடம் நடைபெற்ற இந்த சாலை மறியலில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்தப் பின்னரே சாலை மறியல் கைவிடப்பட்டது.