பண மோசடி வழக்கு.. ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, 70 லட்சம் ரூபாய் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அதில் மேல் விசாரணை நடத்த கேட்டுக் கொண்டதாகவும் நல்லதம்பி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவிடம் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் மனுவை பரிசீலித்து மேல் விசாரணை நடத்தி விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஜனவரி 21-ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கில் முன்னாள் அமைச்சரையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
What's Your Reaction?