உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை கேட்ச்... முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவ்

நம்மால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது. எனக்கு எது சரி என்று தோன்றியதோ, அதனை நான் செய்தேன்.

Jul 11, 2024 - 20:15
Jul 11, 2024 - 20:18
 0
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை கேட்ச்... முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் பிடித்த சர்ச்சைக்குறிய கேட்ச்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது அது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை 2024  இறுதிப்போட்டியில் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. 2007ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்ற நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான படை சாதித்து காட்டியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பின்பு 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. பரபரப்பான இந்த போட்டியில் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி கண்டிப்பாக வெற்றியடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

காரணம் களத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து பும்ரா அட்டகாசமாக பந்துவீசி 16ஆவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனாலும், கிளாசன் அரைசதம் கடந்து கிளாசன் களத்தில் இருந்தார்.

ஆனால், 17ஆவது ஓவரின் முதல் பந்திலேயே கிளாசனை, ஹர்திக் பாண்டியா தட்டித்தூக்கினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. 18ஆவது ஓவரில் மார்கோ ஜான்சன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவையாக இருந்தது.

ஆனால், 19ஆவது ஓவரை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இருந்தது. எதிர் முனையில், டேவிட் மில்லர். பந்துவீச வருவது ஹர்த்திக் பாண்டியா.

முதல் பந்தை தூக்கியடித்தார் டேவிட் மில்லர். அப்போது, லாங் ஆஃப் திசையில் நின்றுகொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் ஒரு அற்புதமான கேட்சை எடுத்து ஆபத்தான டேவிட் மில்லரை வெளியேற்றினார். இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்த சர்ச்சை மட்டும் இன்றுவரை ஓய்வில்லை. பல்வேறு தரப்பினரும், பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கேட்ச் குறித்து முதன்முறையாக சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள சூர்யகுமார் யாதவ், “தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பந்தை பிடிக்கும் போது நான் எல்லைக் கோட்டை தொடவில்லை. நம்மால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது.

எனக்கு எது சரி என்று தோன்றியதோ, அதனை நான் செய்தேன். கடவுள் அருளால், பந்து என்னிடம் வரும் போது நான் அங்கு இருந்தேன். அந்த கேட்சை பிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த தருணத்தை நினைத்து நான் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அது போன்ற கேட்சுகலை பிடிப்பதற்கான பயிற்சியில் பலமுறை நான் ஈடுபட்டுள்ளேன். போட்டியின் போது எனது மனம் அமைதியாக இருந்தது. நாட்டிற்காக சிறப்பாக விளையாடும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்தார். அந்த தருணத்தில் நான் எதையும் நினைக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் மற்றும் எங்களின் கனவு உலகக் கோப்பை வெல்வதாக தான் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow