Olympics: ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்... டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு!
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றிருந்த நிலையில், தொடர்ச்சியாக இந்தாண்டும் வெண்கலத்தை தட்டித் தூக்கியது. இதனையடுத்து தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது வீரர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், தங்கம் வெல்ல முயற்சித்தும் கடந்த ஆண்டைப் போல வெண்கலமே கிடைத்தது. இருப்பினும் மக்களின் அன்பு, இரட்டிப்பு பதக்கம் போல் உள்ளது எனவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கடந்த 8ம் தேதி இரவு நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த ஒலிம்பிக் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய இந்திய அணி, தங்க பதக்கம் வெல்லும் என கணிக்கப்பட்டது. முக்கியமாக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் தடுப்பாட்டத்தில் அனல் பறந்தது.
ஆனால், ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் போராடி தோற்ற இந்திய அணி, ஸ்பெயின் அணியை வென்று வெண்கல பதக்கம் வென்றது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன், இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் ஹாக்கியில் இருந்து ஓய்வுப் பெற்றார். கடைசிப் போட்டியில் தங்கம் வெல்ல நினைத்தேன், ஆனால் இப்போது பதக்கத்துடன் வெளியேறுவதே ஆறுதலான விஷயம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அணியை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இந்திய ஹாக்கி அணி வெற்றிப் பெற்ற உடனே பிரதமர் மோடி வீடியோ காலில் வீரர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
மேலும் படிக்க - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... அமன் ஷெராவத் அசத்தல்!
இந்நிலையில், டெல்லி திரும்பிய இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆரம்பத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால், இரண்டாவது குவாட்டரின் இறுதிநேரத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் முதல் கோல் அடித்து, 1-1 என சமன் நிலைக்கு கொண்டு வந்தார். அதேபோல், மூன்றாவது குவார்ட்டர் தொடங்கிய சில நிமிடங்களில் அவரே மேலும் ஒரு கோல் அடித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார்.
அதன்பின்னர் ஸ்பெயின் அணி வீரர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை இந்திய வீரர்களும், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷும் அருமையாக தடுத்தனர். ஆட்டம் முடிய கடைசி மூன்று நிமிடங்கள் இருந்த போது, ஸ்பெயின் அணி கோல் கீப்பருக்கு பதிலாக கூடுதலாக ஒரு வீரரை களமிறக்கி போட்டியை சமன் செய்ய போராடி பார்த்தது. ஆனாலும் இந்திய அணி வீர்கள் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆட, இறுதியாக இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்திய ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு#kumudam | #kumudamnews | #Kumudamnews24x7 | #IndianHockey | #HockeyTeam | #Delhiairport | #Winningbronzemedal | #ParisOlympics2024 | #OlympicGamesParis2024 pic.twitter.com/9Vm5L3MDCu — KumudamNews (@kumudamNews24x7) August 10, 2024
What's Your Reaction?