ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை - காட்டுப்பகுதியில் வைத்து தட்டித்தூக்கிய போலீசார்
உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பிற்கு ரவுடி துரையை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
புதுக்கோட்டையை அடுத்த வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை திருவரங்குளம் தைலமரக் காட்டுப்பகுதியில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இருப்பதாக ஆலங்குடி காவல் துறையினருக்கு தகவல் வந்த நிலையில் ஆலங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, திருவரங்குளம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளி துரையை பிடிக்க போலீசார் சென்றபோது, ஆலங்குடி உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பிற்கு ரவுடி துரையை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், ரவுடி துரை சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.
இதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் மகாலிங்கம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து தற்போது சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் பார்வையிட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட துரை திருச்சியை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் என்றும் 4 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வழக்குகளில் தேடப்படும் A+ குற்றவாளிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?