England Player Joe Root Most Test Half Century Record : இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தனது அறிமுகப் போட்டியில் 9ஆவது வீரராக களமிறங்கிய மிலன் ரத்நாயகே அபாரமாக ஆடினார். 135 பந்துகளை சந்தித்த மிலன், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்தார். இதன் மூலம் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில், 338 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 148 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரி புரூக் 56 ரன்களும், ஜோ ரூட் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 326 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
அதிகப்பட்சமாக, ஜோ ரூட் 62 ரன்களும், ஜேமி ஸ்மித் 39 ரன்களும், டான் லாரன்ஸ் 34 ரன்களும், ஹாரி புரூக் 32 ரன்களும் எடுத்தனர். இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கேப்டனாக பொறுப்பேற்று, முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றியை தேடித்தந்த இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையை ஓலி போப் படைத்துள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஆலன் பார்டர் இருவரின் சாதனைகளை முறியடித்து உள்ளார். ராகுல் டிராவிட், ஆலன் பார்டர் இருவரும் தலா 63 அரைசதங்கள் அடித்திருந்த நிலையில், ஜோ ரூட் 64 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் முதலிடத்திலும், சிவ்நரைன் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்திலும் ஜோ ரூட் 64 அரைசதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இன்னும் சில ஆண்டுகள் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவார் என்பதால், சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெயர் | நாடு | போட்டிகள் | அரைசதங்களின் எண்ணிக்கை |
சச்சின் டெண்டுல்கர் | இந்தியா | 200 | 68 |
ஷிவ்நரைன் சந்தர்பால் | மேற்கிந்திய தீவுகள் | 164 | 66 |
ஜோ ரூட் | இங்கிலாந்து | 144 | 64 |
ஆலன் பார்டர் | ஆஸ்திரேலியா | 156 | 63 |
ராகுல் டிராவின் | இந்தியா | 164 | 63 |