பாகிஸ்தானின் நீண்ட கால சாதனை முறியடிப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அபாரம்

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை சேசிங் செய்த, ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

Sep 10, 2024 - 22:45
Sep 11, 2024 - 15:18
 0
பாகிஸ்தானின் நீண்ட கால சாதனை முறியடிப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அபாரம்
இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி சாதனை

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லார்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதோடு தொடரையும் கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 6ஆம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் புகுந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில், 325 ரன்கள் எடுத்தது. வழக்கம்போல், பேஸ்பால் கிரிக்கெட் விளையாடிய ஓலீ போப் 156 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் தனஞ்செய டி சில்வா அதிகப்பட்சமாக 69 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 64 ரன்களை எடுத்தனர். அவர்களை தவிர அஷிதா ஃபெர்னாண்டோ (11) இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 62 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு சுருண்டது. பேஸ்பால் கிரிக்கெட்டை விளையாட நினைத்து, இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனால், இலங்கை அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் பேஸ்பால் கிரிக்கெட்டை விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே, அதிரடியாக விளையாடி வென்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. கடைசிவரை களத்தில் இருந்து பதும் நிசங்கா 124 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் 14 ஆண்டுகால சாதனையை இலங்கை அணி தற்போது முறியடித்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை சேசிங் செய்த, ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. முன்னதாக, 2010ஆம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்களை சேசிங் செய்ததே அதிகப்பட்சமாக இருந்தது.

மேலும், ஆசிய துணைக் கண்டத்திற்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில், சேசிங்கில் இரண்டாவது அதிகப்பட்ச ரன்களையும் இலங்கை அணி பதிவுசெய்தது. முன்னதாக, 2019ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 352 ரன்களை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இருந்தது.

இங்கிலாந்தில் வெற்றிகரமாக சேசிங் செய்த ஆசிய அணிகள் விவரம்:

219 - இலங்கை vs இங்கிலாந்து, ஓவல் மைதானம், 2024

180 - பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா, ஹெடிங்க்லி மைதானம், 2010

173 - இந்தியா vs இங்கிலாந்து, ஓவல் மைதானம், 1971

148 - பாகிஸ்தான் vs இங்கிலாந்து, ஓவல் மைதானம், 2010

138 - பாகிஸ்தான் vs இங்கிலாந்து, லார்ட்ஸ் மைதானம், 1992

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow