சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகியுள்ளது அமரன் திரைப்படம். காஷ்மீரில் நட ந்த தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேசனில் வீரமரணம் அடை ந்த தமிழத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறுதான் இந்த படம் என்பது அனைவரும் அறிந்ததே. அதை எப்படி எடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி; சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பு எப்படி? என இப்போது பார்க்கலாம்.
சாய் பல்லவி ஒரு விமான பயணத்தில் தனது காதலன் முகுந்தை முதலில் சந்திக்கிறார். அவர்களுக்கு இடையே எப்படி காதல் மலர்ந்தது, காதலுக்கு எதிர்ப்பு, முகுந்த் ராணுவத்தில் சேர்ந்தது, அவரின் பணி, தடைகளை மீறி திருமணம், காஷ்மீரில் நடக்கும் பிரச்சினை என முதற்பாதி நகர்கிறது. காஷ்மீர் தீவிரவாதம், முகுந்துக்கு ஏற்படும் இழப்புகள், குடும்பப் பிரிவு, கடைசியில் நடக்கும் ஆபரேசன் என இரண்டாம் பாதி நடக்கிறது.
இரண்டிலும் தனது முத்திரையை பதித்து தான் சிறந்த இயக்குநர் என நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. கல்லூரி மாணவன், ராணுவ பயிற்சிக் கல்லூரி மாணவன், ராணுவ அதிகாரி, அடுத்தக் கட்ட பதவி உயர்வு, காதலன், கணவன், நண்பன், தேசப்பற்று மிக்க அதிகாரி என பல பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடித்தப் படங்களில் அமரன் எந்த காலத்திலும் பேசப்படும், குறிப்பாக எமோஷனல் காட்சிகள், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள், காஷ்மீரில் சீறும் காட்சிகள் செம.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனம், நடிப்பு அருமை. இப்படியொரு படத்தை தேர்ந்தெடுத்து ராணுவத்தின் , ராணுவ வீரர்களின் பெருமை சொல்லி, தானும் அடுத்தக் கட்டம் சென்றுள்ளார் சிவகார்த்திகேயன், வெல்டன்! இந்துவாகவே வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி. கார்கியில் விட்ட தேசிய விருது அமரன் படத்தில் அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. சின்ன, சின்ன அழகான எக்ஸ்பிரஷன் மலையாளம் கலந்த டயலாக், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் மனதில் நிற்கிறார் சாய் பல்லவி.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரது பெற்றோர் கேரக்டர்களும், ராணுவ வீரர்களும் இயல்பாகவே நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் படத்துக்கு பிளஸ். காஷ்மீர், ராணுவ ஆபரேசன் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ராணுவம், ராணுவ சம்பந்தப்பட்ட கதைகள் தமிழில் கொஞ்சம் வந்திருந்தாலும், உண்மை கதை என்பதால் அமரன் தனித்துவம் பெறுகிறான்.
அதேபோல், படத்தில் சில குறைகளும் உள்ளன, கொஞ்சம் நீளம் என்றாலும் தேசப்பற்றை, ராணுவத்தின் பெருமை சொல்லும், ராணுவ வீரர்களின் கடமை, தியாகம் , ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மன நிலையை சொல்லும் அமரன் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமைகிறது.
கிளைமாக்ஸில் அழாதவர்கள் ராணுவத்தினரின் அருமை அறியாதவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. ராஜ்கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்துக்கும், பட குழுவினருக்கும் சல்யூட்.