புழல் சிறையில் வாடும் செந்தில் பாலாஜி.. மீண்டும் நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக்காவல்.. ஜாமின் எப்போது?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Aug 28, 2024 - 17:14
Aug 29, 2024 - 10:20
 0
புழல் சிறையில் வாடும் செந்தில் பாலாஜி.. மீண்டும் நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக்காவல்.. ஜாமின் எப்போது?
senthil balaji court custody

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57 வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடதக்கது. மேலும், சட்ட விரோத பண பரிமாற்றச் தடை சட்ட வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் ஆஜராகததால், இன்று குறுக்கு விசாரணை நடைபெறவில்லை.

ஜாமின் மனு நீட்டிக்கப்படுவதால் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஒரே நம்பிக்கை சுப்ரீம் கோர்ட்டில் எப்படியும் ஜாமின் கிடைத்து விடும் என்பதுதான். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது.

அமலாக்கத்துறையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்னும் சில நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதோடு, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது. அதே போல அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமின் கேட்டு பிரேம் பிரகாஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதி விலக்கான நிகழ்வுகளில் மட்டுமே என்பது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்திற்கும் (PMLA) பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூட பொதுவான ஜாமின் வழங்க வேண்டும் என்று விதி கூறுகிறது, தவிர்க்க முடியாத சூழலில் தான் தண்டனைக்கு முன்பாக சிறை என தெளிவுபடுத்திய நீதிபதிகள், பிரேம் பிரகாஷுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.


உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த வழக்கையே முன்னுதாரணமாக கொண்டு, விரைவில் செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow