எடப்பாடி தலைமையினை ஏற்றுக்கொண்டார் சசிகலா: வைகைச்செல்வன் பேச்சால் எழுந்த சிரிப்பலை
திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக அதிமுக புத் கமிட்டி ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையிலும், அதிமுக முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலையிலும் நடந்த இந்த கூட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளரும்மான வைகைச் செல்வன் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகைச் செல்வன் பேசுகையில், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எடப்பாடியார் தலைமையினை சசிகலா அவர்கள் ஏற்றுக்கொன்டு அவர் வழியில் நடக்கத் தயாராக உள்ளார். மேலும் எடப்பாடியார் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதை சசிகலா அவர்கள் ஏற்றுக்கொண்டதால் தான், திமுகவை கடுமையாக சாடிவருகிறார். சசிகலாவை விட்டால் ஸ்டாலின் அவர்களின் டோப்பா முடியையே கழற்றி விடுவார்கள்” எனவும் குறிப்பிட்டார்.
மறைமுக பேச்சால் எழுந்த சிரிப்பலை:
அதாவது, இக்கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்கிற அதிமுக பெண் நிர்வாகி பேசியதை மேற்கொள் காட்டி இந்த கருத்தை வைகைச்செல்வன் தெரிவித்தார். இதனால், கூட்டத்தில் பங்கேற்றிருந்த அதிமுக நிர்வாகிகளிடையே சிரிப்பலை எழுந்தது. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் சசிகலா, ஒபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ள அதிமுக தொண்டர்கள் மீண்டும் இணைவார்களா? என்கிற பேச்சு பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய வைகைச்செல்வன், ” பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளார்களா? தினந்தோறும் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களை பார்த்தால் தெரியும், காலை 5 மணிக்கு வாக்கிங் செல்கின்ற திருமணமான பெண்கள் தாலியை கழற்றி வைத்துவிட்டு வாக்கிங் செல்கின்றார்கள். அதற்கு காரணம் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகின்றது. கணவர் கட்டிய தாலியையே கழற்றி வைத்துவிட்டு செல்கின்ற அவலநிலை தான் திமுக ஆட்சியில் நிலவுகிறது” எனவும் திமுகவை கடுமையாக சாடி அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச் செல்வன் பேசினார்.
Read more: குறைந்த விலையில் தங்க கட்டி: அதீத ஆசையால் 48 லட்சத்தை இழந்த நபர்!
What's Your Reaction?






