குறைந்த விலையில் தங்க கட்டி: அதீத ஆசையால் 48 லட்சத்தை இழந்த நபர்!
குறைந்த விலையில் தங்க கட்டி கொடுப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் ₹48 லட்சம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கருப்பையா ( 23 ), கண்ணன் ( 22 ) ஆகிய இருவரை ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு குறைந்த விலையில் தங்க கட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் வந்துள்ளது. விளம்பரத்தில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்ட முத்துக்குமாரிடம் பேசிய அடையாளம் தெரியாத நபர், ரூபாய் 48 லட்சத்தை எடுத்துக்கொண்டு ராஜபாளையத்திற்கு வர சொல்லி உள்ளார்.
இவரது பேச்சை நம்பி கடந்த சனிக்கிழமை முத்துக்குமார் ரூ.48 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே வந்துள்ளார். அடையாளம் தெரியாத நபரின் பெயரைச் சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்ட நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா (23), முத்துக்குமாரிடமிருந்து 48 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கக் கட்டியை காட்டி உள்ளார்.
அடையாளம் தெரியாத முக்கிய குற்றவாளி:
நகை கடைக்கு சென்று தங்கக் கட்டிகளை சோதனை செய்த பின் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி அவரை அழைத்துக் கொண்டு நகை கடைக்கு சென்று உள்ளார். முத்துக்குமார் இறங்கி நகைக்கடைக்குள் செல்லும் போது, மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த கண்ணன் என்பவர் உடன் கருப்பையா பணம் மற்றும் தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடக்கு காவல்துறையினர் தப்பி ஓடிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது தாங்கள் கமிஷனுக்காக வேலைக்கு வந்ததாகவும், பணத்தையும் தங்க கட்டிகளையும் அடையாளம் தெரியாத நபரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அடையாளம் தெரியாத நபரை கைது செய்ய தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






