TN Budget 2025: வெளிநாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி.. ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ள தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. இதைத்தொடர்ந்து, 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்:
- நாள்தோறும் மாறிக் கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப நூல்களை. துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி இயந்திர மொழியாக்கத் (Machine Translation) தொழில்நுட்பத்தின் துணையுடன் தமிழ் மொழியில் உடனுக்குடன் பதிப்பாக்கம் செய்திட 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மேலும், பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளின் கையெழுத்துப் பிரதிகளை மின் பதிப்பாக்கம் செய்திட, வரும் நிதியாண்டில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அறிவைப் பரவலாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்பட்டு வரும் புத்தகத் திருவிழாக்களை நாடே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றது. இதன் அடுத்தகட்ட நகர்வாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் புதுதில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம் போன்ற பிற இந்தியப் பெருநகரங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும், குறிப்பாக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களிலும், தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் இந்த ஆண்டு முதல் நடத்தப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும் தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்குத் தமிழ்மொழி மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களைக் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்திட, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்ச் செம்மொழியின் பெருமையினையும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பினையும் உலகத் தமிழ் இளைஞர்களிடையே பரவிடச் செய்திடும் நோக்கத்தில், தமிழ்நாடு மட்டுமன்றி இதர இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் உலகத் தமிழ் மையங்களில் பயின்றிடும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில். கணினிவழித் தேர்வு முறையில் உலகத்தமிழ் ஒலிம்பியாட் போட்டி இனி ஆண்டுதோறும் நடத்தப்படும். உலக அளவிலான வெற்றியாளர்கள் மட்டுமன்றி, தேசிய மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிடும் மாணவர்களுக்குமான மொத்தப் பரிசுத் தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கிச் சிறப்பிக்கப்படும்.
- தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில், அகரம்-மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த தமிழ்மொழிக்கும் இதர இந்திய மொழிகளுக்குமான மொழியியல் உறவு, தென்னிந்தியப் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் குறித்த பதிவுகள், பாறை ஓவியங்கள் தொடங்கி, கல்வெட்டுகள், அச்சுக்கலை வழியே கணித்தமிழ் வரையிலான தமிழ்மொழியின் நீண்ட பயணம் குறித்த பல அரிய பதிவுகள் உயர் தொழில்நுட்ப வசதியுடன் இந்த மொழிகளின் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்.
பண்பாடு
- தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையினை, இலக்கியம், வரலாறு மட்டுமன்றி தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொணர்ந்த சான்றுகளையும் அறிவியல் முறைப்படி ஆய்வுசெய்து அறிவுலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறுவிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு எடுத்து வருகிறது.
- தமிழ்நாட்டின் பல்வேறு இரும்புக்கால தொல்லியல் தளங்களில் சேகரிக்கப்பட்ட சான்றுகள் குறித்து, உலகப்புகழ்பெற்ற ஆய்வகங்களில் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், தமிழ் நிலப்பரப்பில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு உருக்கும் தொழில்நுட்பத்தின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் உலகிற்கு அறிவித்தார்கள். உலகின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களும், தேசிய அளவிலான வல்லுநர்களும் இந்த ஆய்வு முடிவுகளை வரவேற்றும் பாராட்டியும் உள்ளனர்.
- இரும்பின் தொன்மை குறித்தும் பழந்தமிழரின் தொழில்நுட்பத் திறன் குறித்தும் வெளியான இந்த ஆராய்ச்சி முடிவுகளை உலகத் தமிழர்கள் பெருமகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இவ்வேளையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இம்மாமன்றத்தில் பெருமிதத்தோடு முதலமைச்சர் அறிவித்த, வரலாற்றில் இடம்பெறவிருக்கும் வாசகத்தை நாம் நினைவுகூர்ந்து, இரும்பின் உறுதியோடு உரக்கச் சொல்வோம் "இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்” என்று கூறினார்.
What's Your Reaction?






