தமிழக பட்ஜெட்: 2000 ஏக்கரில் சென்னை அருகே புதிய நகரம்- அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்பினை வெளியிட்டு வரும் நிலையில், சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.

Mar 14, 2025 - 11:20
 0
தமிழக பட்ஜெட்: 2000 ஏக்கரில் சென்னை அருகே புதிய நகரம்- அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
new city built near chennai

பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

வட சென்னை வளர்ச்சித் திட்டம்:

சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ். பேருந்து நிலையம் அமைத்தல், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர்ப் பணிகள், கல்வி மற்றும் மருத்துவ உட்கட்டமைப்புப் பணிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள், கடற்கரை மேம்படுத்துதல், மீன் சந்தை அமைத்தல், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக் கட்டமைப்புப் பணிகள், மின் மயானங்கள் அமைத்தல், துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகள் தரம் உயர்த்தும் பணிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி அமைத்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் 6,858 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை அருகே புதிய நகரம்:

"நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. அதிலும் குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் 33 பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருவதால், உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கிட, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.

எனினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும், பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநர்களின் கருத்தை ஏற்று முதற்கட்டமாக சென்னைக்கு அருகே ஓர் புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்" என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more: TN Budget 2025: சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதில் புதிய மாற்றம்- ரூ.2423 கோடி ஒதுக்கீடு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow