தமிழக பட்ஜெட் 2026

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் மற்றும் துறைவாரியான ஒதுக்கீடுகள்!

2026ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் எந்தந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் மற்றும் துறைவாரியான ஒதுக்கீடுகள்!
Key features and department wise allocations
தமிழக சட்டமன்றத்தில் இன்று 2026-2027-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், திமுக அரசின் நான்கரை ஆண்டு சாதனைகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றன.

தமிழகத்தில் வறுமையை ஒழிப்பதற்கான இறுதிப்போரை அரசு தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வி, சுகாதாரம், மகளிர் நலன் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மகளிர் மற்றும் சமூக நலத் திட்டங்கள்

தமிழக அரசின் முத்திரை திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக, 1.31 கோடி பயனாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் (3 மாத தொகை + சிறப்புத் தொகை) ஒரே நாளில் 6,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் மாணவிகள் பயனடைந்து வரும் நிலையில், பெண்களுக்குச் சொத்து வரிப்பதிவு கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் இளைஞர் நலன்

பள்ளிக்கல்வித் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்திற்காக ரூ. 1,884 கோடி வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடியும், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ. 2,171 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ. 718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு

மருத்துவத் துறைக்கு ரூ. 22,090 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், புற்றுநோய் கண்டறியும் சோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை மேம்பாட்டிற்காக ரூ. 13,062 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 12,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 28,687 கோடியும், நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ. 28,227 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மற்றும் இதர அறிவிப்புகள்

புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க ரூ. 285 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களின் வெற்றியை அமைச்சர் நினைவு கூர்ந்தார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 1,471 கோடியும், சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,634 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன.

தமிழகம் 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், மத்திய அரசின் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.