மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Sep 1, 2024 - 13:09
Sep 1, 2024 - 13:11
 0
மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால்  பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது மேட்டு நீரத்தான் கிராமம். இக்கிராமத்தில் ஒரு தரப்பினர் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், கிராமத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் எருது கட்டு நடைபெறுவதால், இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மஞ்சுவிரட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள் அவ்வப்போது கிராமத்தில் சலசலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை மேட்டு நீரேத்தான் கிராமத்துக்குள் புகுந்த ஒரு தரப்பினர் அப்பகுதியில் இருந்தவர்களை கல் மற்றும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி, ராமச்சந்திரன், சூர்யா உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். மேலும் வாகனங்கள், கடை உள்ளிட்டவையும் லேசான சேதமடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஆண்டிபட்டி பங்களா என்னுமிடத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே சம்பவ இடம் வந்த சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார், வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர், அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும், மேட்டுநீரேத்தான் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பினரை தாக்கியவர்கள் கைது செய்யும் வரை பொதுமக்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow