ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேமுதிகவுக்கு சம்மந்தமா? - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Premalatha Vijayakanth on Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கும் சம்மந்தம் இருப்பதாக வெளியான தகவலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jul 21, 2024 - 20:10
Jul 22, 2024 - 10:28
 0
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேமுதிகவுக்கு சம்மந்தமா? - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவிற்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு

Premalatha Vijayakanth on Armstrong Murder Case: பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 16 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது தப்பிச் செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். தவிர, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் காவல் துறையினர் கையில் எடுத்து, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சந்தேகிக்கும்படியான ரவுடிகளை கண்காணித்தும் வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிக நிர்வாகி மணிகண்டனுக்கும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. திருவள்ளூரை சேர்ந்த மணிகண்டன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக கவுன்சிலரான ஹரிஹரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் தேமுதிக நிர்வாகியிடம் விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலுக்கு தேமுதிக மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை வலைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது என தகவல் வருகிறது. தேமுதிகவை சேர்ந்த திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான செய்தி விசாரணை என்ற பெயரில் அழைத்து பேசியுள்ளனர். விசாரணையில் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கில் உட்படுத்தாமல் அனுப்பி விட்டனர்.

இதுதான் நேற்று நடந்திருக்கிறது. அதற்குள் தேமுதிக விற்கும் தொடர்பு இருக்கிறது என்ற முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் கொடுக்கும் எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் இது கண்டிக்கத்தக்க விஷயம். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழிக்கு ஏற்ப தீர விசாரித்து அதற்கு பிறகு தான் முக்கிய தொலைக்காட்சிகள் இதுபோன்ற தகவல்களை போட வேண்டுமே தவிர பொய்யான தகவல்களை செய்தியாக வெளியிடுவது கண்டிக்கத்தக்க ஒன்று.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கேப்டன் ராணுவ கட்டுப்பாட்டோடு வளர்த்து தமிழகத்தில் ஒரு சிறந்த கட்சியாக கொண்டு வந்துள்ளார். முக்கிய தொலைக்காட்சிகள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை தீர ஆலோசித்து வெளியிட வேண்டும் இல்லை என்றால் பொய் தகவல்களை தருவதன் மூலம் மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டி வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow