புழல் சிறை டூ ஓமந்தூரார் மருத்துவமனை.. ஐசியூவில் அனுமதி.. செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு?
Senthil Balaji Admitted in Omandurar Hospital : உடல் நலக்குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Senthil Balaji Admitted in Omandurar Hospital : மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த 2014 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்டது. உடல்நிலை உள்பட பல்வேறு காரணங்களை கூறி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தொடந்து தள்ளுபடி செய்து வருகின்றன.
கடந்த 18ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 48வது முறையாக நீட்டிக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
அப்போது, விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலே இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து வருவதால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கில் நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்..
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதலுதவி செய்த சிறை மருத்துவர்கள், அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில், பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர், மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?