அமரன் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு.... திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Nov 9, 2024 - 04:18
 0
அமரன் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு.... திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!
அமரன் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு.... திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் ரிலீஸானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படம், வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் முதன்முதலாக ஆர்மி ஆபிஸராக நடித்துள்ளதால் அமரன் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் 3500க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸான அமரன், பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாகவும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவது போலவும் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக பலர் சமூக வலைத்தளங்களில் இத்திரைப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதே சூழலில்  பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் இந்த படத்தை திரையிடுவதை நிறுத்தக்கோரி கருத்துகள் தெரிவித்து வந்ததோடு, இன்று "அமரன்" திரைப்படம் ஒளிபரப்பப்படும் ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் திரையரங்கிற்கு முன் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிவித்திருந்தனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு திரையரங்கில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திரையரங்கங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்கம், விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கம், வடபழனியில் உள்ள கமலா திரையரங்கம் மற்றும் ஃபோரம்மாலில் உள்ள திரையரங்கிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடைய நேற்று நடிகர் கமலஹாசனின் பிறந்தநாள் என்பதால் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் நடிகர் கமலஹாசனுக்கு எதிராகவும், அமரன் திரைப்படத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கமலஹாசன் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow