ஆம்ஸ்ட்ராங் படுகொலை... புதிய சிசிடிவி காட்சி வெளியீடு... எதிர்க்கட்சி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி?
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் முதல் சிசிடிவி காட்சிகள் முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களும் வேறு மாதிரி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவறி விட்டதாக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அண்ணாமலை, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டினார்கள்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த படுகொலை தொடர்பாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
'ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல; இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்று நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவிக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். 'இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் விட மாட்டோம்' என்று ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தை போலீசார் இன்று என்கவுன்டர் செய்தனர். காவலில் இருந்து தப்பி ஓடிய அவர் போலீசாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனால் ரவுடி திருவேங்கடத்தின் என்கவுன்டர் சந்தேகம் அளிக்கிறது. போலீஸ் காவலில் உள்ள ஒருவரை அவசரம், அவசரமாக கொல்ல வேண்டிய தேவை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வெளியிட்ட இந்த சிசிடிவி காட்சியில் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பொதுமக்கள் கண்முன்னே கொடூர கும்பல் அவரை சர்வசாதாரணமாக வெட்டி கொலை செய்யும் திகைக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அருள், திருவேங்கடம், கோகுல், சிவசக்தி, விஜய், சந்தோஷ், ராமு உள்ளிட்ட கொலையாளிகள் உணவு டெலிவரி ஊழியர்கள் போல் உடையணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கை இரக்கமற்ற முறையில் வெட்டி தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 30 நிமிடங்களின் கொலையை அரங்கேற்றி விட்டு அவர்கள் தப்பிச் செல்கின்றனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் முதல் சிசிடிவி காட்சிகள் முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களும் வேறு மாதிரி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
தற்போது போலீசார் வெளியிட்ட புதிய சிசிடிவி காட்சிகளில் கைது செய்யப்பட்ட அருள், திருவேங்கடம், கோகுல், சிவசக்தி, விஜய், சந்தோஷ், ராமு ஆகியோரின் முகங்கள் தெளிவாக உள்ளதை காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் கருத்து கூறி வருகின்றனர்.
What's Your Reaction?






