ஜிஎஸ்டி கட்டாமல் மோசடி.. தனியார் நிறுவன இயக்குநரை கைது செய்த போலீஸ்
பணிக்கு ஆட்களை அனுப்பியதற்காக பணத்தை பெற்று கொண்டு 16.32 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி கட்டாமல் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மெக்ரத் ஜெயராஜ். இவர் பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை தலைவராக உள்ளார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
இதையடுத்து கடந்த 2023-24 ஆம் ஆண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள், காவலாளிகள் என மொத்தம் 126 பேர் பெண்டா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இவர்களுக்கான ஊதியத்தை ஜிஎஸ்டி-யோடு சேர்த்து ஒரு கோடியே 90 லட்சத்தை பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செலுத்தியதாக தெரிகிறது.
மேலும் படிக்க: தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன்..? திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
ஆனால் பெண்டா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் முகமது ஸர்சாத், கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியான 16 லட்சத்து 32 ஆயிரத்து 95 ரூபாய் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவர் மெக்ரத் ஜெயராஜ், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் முகமது ஸர்சாத்திற்கு சம்மன் கொடுக்கப்பட்டு நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று முகமது ஸர்சாத்தை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?






