’பாமக சாதிக்கட்சி என்றால், விசிக என்ன கட்சி?’.. திருமாவளவனுக்கு அன்புமணி பதிலடி!
''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக டிரெண்டிங் டாப்பிக்கில் இருந்து வருபவர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவளவன், ’’அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பாஜக, பாமக தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாம்; அதிமுகவும் விரும்பினால் பங்கேற்கலாம்” என்று கூறியிருந்தார்.
இதனால் ’திருமாவளவன் திமுகவை எதிர்க்கத் தொடங்கி விட்டார்’என்று அதிமுக, பாஜக குஷியான நிலையில், ’ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்று தான் பேசிய பழைய வீடியோவையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து திமுகவினரின் ரத்த அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்தினார் திருமாவளவன். ’’இந்த வீடியோமூலம் திமுக-விசிக இடையிலான பிரிவு ஏற்படுவது உறுதியாகி விட்டது’’என்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க, பாமக, பாஜகவை சாதி, மதவாத கட்சிகள் என்று திருமாவளவன் விமர்சித்து இருந்தது மறுப்பக்கம் சர்ச்சையை கிளப்பி இருந்தது. '’பாமகவை சாதிக்கட்சி என்று சொல்வதற்கு முன்பு விசிக எதை வைத்து இயங்கி வருகிறது என்பதை திருமாவளவன் யோசித்து பார்க்க வேண்டும்’என பாமகவினர் மட்டுமின்றி பலரும் கருத்துகளை கூறி வந்தனர். இந்நிலையில், பாமகவை சாதிக்கட்சி என்று கூறிய திருமாவளவனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணியிடம், திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அன்புமணி, ’’சமூக நீதி, மது ஒழிப்புக்காக போராடிய பாமகவை திருமாவளவன் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். பாமகவை விமர்சிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களாலும் விசிகவை தரக்குறைவாக பேச முடியும். நீங்கள் மது ஒழிப்பு மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். நாங்கள் எந்த கட்சி மது ஒழிப்புக்கு எதிராக போரட்டம், மாநாடு நடத்தினாலும் வரவேற்போம். அந்த வகையில் விசிக எங்களுக்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் அந்த கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். மது ஒழிப்பு பாமகவின் அடிப்படை கொள்கை.
மது ஒழிப்பில் பா.ம.க. பி.எச்.டி. படித்துள்ளது. திருமாவளவன் எல்.கே.ஜி. தான் வந்துள்ளார். திருமாவளவன் மது ஒழிக்க வேண்டும் என்று உண்மையான எண்ணம் கொண்டிருந்தால் முதலில் எங்களுக்கு தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என்று கூறும் அவர் எதற்காக மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர். பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு தேர்தலில் வாக்கு கேட்டார்’’என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் ’ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’என்று திருமாவளவன் பகிர்ந்த வீடியோவுக்கு அன்புமணி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘’என்னை பொறுத்தவரை திருமாவளவன் பகிர்ந்த வீடியோ சரியானது. நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி. ஆனால் அந்த வீடியோவை அவர் ஏன் நீக்கினார்? என்று தான் தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?