திருமாவளவன் விவகாரம்: 'எல்லாம் அவர் பார்த்துப்பார்’.. சேகர்பாபு பதில்!

''முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Sep 15, 2024 - 11:20
Sep 15, 2024 - 11:21
 0
திருமாவளவன் விவகாரம்: 'எல்லாம் அவர் பார்த்துப்பார்’.. சேகர்பாபு பதில்!
Thirumavalavan And Sekar Babu

சென்னை: சென்னை முத்தையாலுபேட்டையில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கோயிலில் கடைசியாக 2003ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு இருந்தது. இப்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு  நடைபெற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  சேகர்பாபு, ‘’முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது; நாளை 26 கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. அதையும் சேர்த்து 2,200 திருக்கோவில்களின் குடமுழுக்கு நிறைவு பெறுகிறது. 

மெட்ரோ ரயில் பணிக்காக சேமாத்தம்மன் ஆலயம் அகற்றப்பட்டது. இதனால் இந்து சமய அறநிலைத்துறை தீவிர முயற்சி செய்து திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இன்று காலை 1.58 கோடி செலவில் ஆதி சேமாத்தம்மன் ஆலயம் கட்டுவதற்கான திருப்பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருக்கோவில்கள் அகற்றப்படுவதாக ஒரு போலியான பொய்யான பிம்பத்தை உருவாக்க முற்படுபவர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

இந்த புரட்டாசி மாதம் 21ம் தேதி சென்னை பார்த்தசாரதி கோவிலில் இருந்து நான்கு தவணைகளாக ஆயிரம் மூத்த குடிமக்கள் ஆன்மீகப் பயணத்திற்கு கொண்டு செல்லும் பணியும் தொடங்க உள்ளது. கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று எங்கு இருந்து கோரிக்கை வந்தாலும். அங்கெல்லாம் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. எங்கும் அதற்கு தடை இல்லை. வருகின்ற காலங்களில் இது போன்ற திருக்கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும்’’என்றார். 

அப்போது ’கோவை மாவட்டத்தை திமுக கண்டுகொள்ளவில்லை; இதனால் கோவை மாவட்ட தொழில் அதிபர்கள் திமுகவை ஆதரிக்கவில்லை என்று பாஜகவின் வானதி சீனிவாசன் பேசியது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‘’வானதி சீனிவாசன் தப்பித்தேன் பிழைத்தேன் என்று கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர். கோவை மண்டலத்தில் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள் திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் பாஜகவின் கோவை வேட்பாளர் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மண்ணை கவி இருப்பார்? தொழிலதிபர்கள் ஆதரவு இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்று எம்.பி.யாகி இருப்பார். கோவை, தமிழ்நாடு மட்டுமல்ல; தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்களெல்லாம் திமுக ஆட்சியை, முதல்வர் ஸ்டாலினை ஏற்றுக்கொண்டுள்ளனர்’’என்று தெரிவித்தார். 

மேலும் ’ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்’என்று பேசிய பழைய வீடியோவை விசிக தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டபோது, ‘’திருமாவளவன் விவகாரம் குறித்து கட்சித் தலைவர்(மு.க.ஸ்டாலின்) முடிவெடுப்பார். 2026ம் ஆண்டு தேர்தலுக்கான பணிகளை நோக்கி செயல்படுவதே எங்களின் வேலை’’ என்று பதில் அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow