போதிய பேருந்துகள் இல்லை.. கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்.. பரபரப்பு!
வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேகலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு தொடக்கம் முதலே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை; இங்கு இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று வார இறுதி நாளையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால், மற்ற பயணிகள் பயணிக்க முடியாமல் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு முறையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு நீண்ட நேரம் பேருந்துகள் இயக்கப்படவில்லை என தெரிகிறது. பேருந்து இல்லாததால் பயணிகள் பல மணி நேரம் காத்து நின்றனர்.
நேரம் அதிகரிக்க அதிகரிக்க பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளுக்கு நள்ளிரவில் பேருந்துகள் சுத்தமாக இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என பலரும் நடைமேடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் படுத்து உறங்கினர். ஆனால் நள்ளிரவு 1 மணி வரையிலும்
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஏற்கெனவே இயக்கப்பட்ட ஒருசில பேருந்துகளிலும் ஆபத்தான வகையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்தனர்.
இதனால் பொறுமையிழந்த மக்கள் ஓட்டுனர்களிடம், நடத்துனர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஆகியும் பேருந்துகள் இயக்கப்படாததால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் ஒன்று திரண்டு மற்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய ஆறு பேருந்துகளை சிறை பிடித்து அந்த பேருந்துகள் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பயணிகள் கலைந்து சென்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
வார இறுதி நாட்களில் தென்மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?






