40 பிஎச்டி பட்டதாரிகள் நடித்த பராரி.... ராஜூமுருகன் உதவியாளர் இயக்குகிறார்.
பராரி என்றால் ஒரு ஊரு விட்டு , இன்னொரு ஊருக்கு போய் பிழைப்பு நடத்துபவர்கள் என்று அர்த்தம். வடமாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு வேலை தேடி செல்லும் இரண்டு தரப்பு மக்களின் வாழ்வியல், பிரச்னைகளை இந்த படம் பேசுகிறது. ஷான்ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் 20 நிமிட கிளைமாக்ஸ் பேசப்படும்.
ராஜூமுருகன் சிஷ்யர் ஏழில் பெரியவேடி இயக்கும் படம் பராரி. ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் நடிக்க, ஷான்ரோல்டன் இசையமைத்துள்ளார். இதென்ன தலைப்பு? இயக்குனர் ராஜூமுருகனுக்கும் இந்த படத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்டபோது, இயக்குனர் கூறியது:
ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களில் ராஜூமுருகனுடன் வேலை செய்தேன். அவர் தனது உதவியாளர்களிடம் கூட ‘‘சொல்லுங்க பாஸ்’’ என்று மரியாதையாக பேசுவார். இந்த கதையை வைத்துக்கொண்டு பல தயாரிப்பாளர்களிடம் பேசினேன். கதை நல்லா இருக்குது சொன்னவர்கள், படத்தை தயாரிக்க மறுத்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் அப்படி. ஒரு கட்டத்தில் சினிமா வேண்டாம், ஊருக்கு போகிறேன் என்று மன வருத்தத்துடன் சொன்னபோது ராஜூமுருகன் பதட்டமாகிவிட்டார். உங்களுக்காக நான் பண்ணுறேன் என்று உற்சாகம் கொடுத்து இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தார். ராஜூமுருகன் வழங்கும் பராரி என்றுதான் படத்தை வெளியிடுகிறோம்
பராரி என்றால் ஊரு விட்டு, வேறு ஊருக்கு போய் பிழைப்பவர்கள் என அர்த்தம். வடமாவட்டங்களை சேர்ந்தவர்கள் 150ரூபாய், 200ரூபாய் சம்பளத்துக்காக, பிழைப்புக்காக பெ ங்களூர் செல்வார்கள். அங்கே 6 மாதம் வேலை பார்த்துவிட்டு, சொந்த ஊருக்கு வருவார்கள். அவர்களை பராரி என்பார்கள். அப்படி மாம்பழ கூழ் தயாரிக்க செல்லும் இரண்டு தரப்பு மக்களின் வாழ்வியில், பிரச்னை, பல விஷயங்களை இந்த கதை பேசுகிறது. நிஜத்தில் நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு இந்த கதை. திருவண்ணாமலை, பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தது. அங்கேயே அனைத்து நடிகர்களுக்கும் வொர்க் ஷாப் நடத்தி, நடிப்பு கற்றுக்கொடுத்தோம். தோழர் வெங்கடேசன் படத்தில் நடித்த ஹரிசங்கர் ஹீரோ. இந்த கதைக்காக அவர் 40 கிலோ எடையை குறைத்து திருவண்ணாமலை இளைஞராக மாறினார். 200க்கும் அதிகமான ஹீரோயின் பார்த்து, சங்கீதாவை ஹீரோயினாக புக் செய்தோம்.
ஷான்ரோல்டன் என் நண்பர். இந்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கும் முன்பே பாடலுக்கான டியூன்களை கொடுத்துவிட்டார். பாடலாசிரியர் உமாதேவி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். பரியேறும்பெருமாள் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வட தமிழகத்தில் ஒரே குல தெய்வத்தை கும்பிடும் இரண்டு வேறு தரப்பு மக்கள், இரண்டுபேருமே விளம்புநிலை மனிதர்கள், அவர்களுக்கு இடையேயான பிரிவினைகள், பிரச்னைகள், பெங்களூரில் பிழைப்புக்காக செல்லும் போது அவர்களுக்கு என்ன நடக்கிறது. அவர்களை தவறாக நடத்துபவர்கள் யார், இதற்கு என்ன தீர்வு என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். இந்த படம் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமல்ல, திராவிட அரசியலையும் பேசுகிறது. அது என்ன என்பதை இப்போதைக்கு வெளிப்படையாக சொல்ல முடியாது.
இந்த படத்தில் 40பேரை அறிமுகப்படுத்துகிறேன். அவர்கள் அனைவரும் பிஎச்டி பட்டதாரிகள். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை வந்து செங்கல்சூளையில், பெங்களூரில் மாம்பழ பேக்டரியில் வேலை செய்து இயல்பாக நடித்தார்கள். அவர்கள் புதுச்சேரி, தஞ்சை, டெல்லி பல்கலைக்கழக பட்டதாரிகள். ஒரு படைப்பு அல்லது படம், நம்மை சலனப்படுத்த வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த படைப்பு குப்பை தொட்டிக்கு போகலாம் என்பார் எழுத்தாளர் அருந்ததிராய். அந்தவகையில் இந்த படத்தின் 20 நிமிட கிளைமாக்ஸ் பேசப்படும். இது காதல் அதிகம் இல்லை. வாழ்க்கை சார்ந்த கதை. தண்ணீர் என்பது முக்கியமான பிரச்னை ஆக இருக்கிறது. தண்ணீருக்காக இங்கே என்ன நடக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறோம். இதில் குறியீடு, உருவ ஒற்றுமை, ஜாதி வம்பு இதெல்லாம் கிடையாது. யாரையும் இதில் புண்படுத்தவில்லை. யார் மீது தவறு என்று காண்பிக்கவில்லை. கிளைமாக்ஸ் பாசிட்டிவ் ஆக இருக்கும். அடுத்த மாதம் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.’’ என்கிறார் இயக்குனர்
What's Your Reaction?