“அமரனில் நடித்தது வாழ்நாள் பாக்கியம்... விஜய்க்கு கோடான கோடி நன்றி..”: சிவகார்த்திகேயன் Exclusive

அமரன் படத்தில் நடித்தது பற்றியும் மேஜர் முகுந்த வரதராஜன் குறித்தும் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் பற்றி குமுதம் செய்திகளுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டியை தற்போது பார்க்கலாம்.

Oct 30, 2024 - 17:42
 0
“அமரனில் நடித்தது வாழ்நாள் பாக்கியம்... விஜய்க்கு கோடான கோடி நன்றி..”: சிவகார்த்திகேயன் Exclusive
சிவகார்த்திகேயன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள அமரன் திரைப்படம், நாளை வெளியாகிறது. அமரன் மனசுக்கு நெருக்கமான படம் எனக் கூறியுள்ள சிவகார்த்திகேயன், அப்பா ஜெயில் சூப்பிரண்ட்டாக இருந்து 1500 கைதிகளை சமாளித்தார். அவரின் கம்பீரம், நேர்மை, கடமை உணர்வை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த நினைவுகள் இந்தப் படத்துடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியது. கடந்த 21 ஆண்டுகளாக அப்பாவின் நினைவுகளுடன் இருக்கிறேன். அதேபோல் அப்பா சிறைத் துறையில் பணியாற்றியதால் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அங்கு செல்வேன். மிட்டாய் சாப்பிட ஆசைப்பட்டு செல்லும் நான், உயர் அதிகாரிகள் உட்பட பலர் தேசிய கொடிக்கு மரியாதையாக சல்யூட் அடிப்பதை பார்த்து வியந்து இருக்கிறேன். 

தேசிய கொடி மிகவும் உயர்வான விஷயம் என்பது ஆழ்மனதில் பதிந்தது. காலங்கள் செல்லச் செல்ல தேசிய கொடி என்பது நம் தேசத்தின் அடையாளம். நம் தேசம் பாதுகாப்பாக, நிம்மதியாக இருக்க, உறவுகளை, உணர்வுகளை தாண்டி, இரவு பகலாக உழைப்பவர்கள் ராணுவத்தினர். அவர்களில் பலர் உயிரை கொடுத்தும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் இறுதி மரியாதை, திருச்சியில் நடந்தபோது அதில் கலந்துகொண்டேன். அப்போது ராணுவத்தினர் மீதான மரியாதை இன்னமும் அதிகரித்தது. தேசத்துக்காக தனது இன்னுயிரை இழந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த வரதராஜனின் வாழ்க்கைதான் அமரன். 

இந்த கதையி்ல் நடித்ததை என் வாழ்நான் பாக்கியமாக நினைக்கிறேன். அமரன் பார்த்த மிலிட்டரி ஆபீசர்ஸ் படத்தை மனம் திறந்து பாராட்டினார்கள். இந்தப் படத்தின் கதையும் சில காட்சிகளும் அப்பாவை நினைவுப்படுத்தியது. அமரன் மிலிட்டரி ஆபரேஷன் சம்பந்தப்பட்ட கதை அல்ல, இது ஒரு ராணுவ அதிகாரியின் எமோஷனல் ஜர்னி. முகுந்த் வரதராஜன் பணியாற்றிய காஷ்மீரில், அவர் வீரமரணம் அடைந்த பகுதியில் அமரன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு என்பதால், அதிகமாக செட் போட வேண்டாம். அவர் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், அது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. குறிப்பாக, காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதல்ல. ராணுவ முகாமில் படப்பிடிப்பு நடத்தியபோது நிஜ ஏகே 47, பாம் என ஆயுதங்கள் சுற்றிலும் இருக்கும். பக்காவாக அனுமதி வாங்கி, பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தினோம். நம்மிடையே இருந்த ஹீரோ பற்றிய சினிமா என்பதால், அவர்களின் ஒத்துழைப்பும் அதிகமாகவே இருந்தது. அவரின் காலக்கட்ட வாழ்க்கை சம்பவங்களை இந்த கதை சொல்கிறது. 

காஷ்மீர் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், நிஜத்தை சொன்னால் அவ்வளவு அழகாக இருக்கிறது. பகலில் காஷ்மீரை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும், அது அமைதியாக இருக்கும். இப்ப டூரிஸ்ட் அதிகம் வருகிறார்கள்... ஓட்டல்களில் சாப்பிட கூட இடம் இருக்காது... ஆனால், சில ஏரியா சென்சிஸ்டிவ். அங்கே படப்பிடிப்பு நடத்தும் போது எங்களை சுற்றி 3 அடுக்கு மிலிட்டரி பாதுகாப்பு இருக்கும். எங்கள் வேலையை நாங்க பார்த்துக்கொண்டிருந்தபோது, அவங்க பாதுகாப்பு பணிக்காக, சண்டைக்காக அவ்வப்போது கிளம்பி செல்வார்கள். நல்லபடியாக திரும்பி வரணும்னு மனசு திக்திக்னு இருக்கும். காஷ்மீர் மக்கள் அவ்வளவு அழகானவர்கள், அந்த மொழி எனக்கு புரியவில்லை என்றாலும் நான் பார்த்த பலர் இன்னோசென்ட். 

அதேபோல் அமரன் படத்துக்காக நிஜ ஆயுதங்களை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மிலிட்டரி சம்பந்தப்பட்ட கதை என்பதால் அவர்களிடம் முறைப்படி அனுமதி வாங்கி ஆயுதங்களை பயன்படுத்தினோம். நான் சுட பயற்சி எடுத்தேன், பல சீன்களில் டம்மி வெப்பன்களும் பயன்படுத்தப்பட்டன. அதைவிட உண்மையான வெப்பன்கள் அதிக கனம் இல்லாமல் பயன்படுத்தவும் எளிதாக இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஏகப்பட்ட ராணுவ வீரர்களை சந்தித்து பேசினோம், அவர்களின் கதையை கேட்டோம், அது எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தன. சில கதைகள் மனதை கனமாக்கும் தன்மையுடையது. நேற்று வரை உடன் இருந்த நண்பர்களை மறுநாள் சண்டையில் இழந்து இருக்கிறோம்... ஆனால், மறுநாள் வழக்கமான பணியை தொடர்வோம். வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக முகாமுக்கு திரும்புவார்கள் என உறுதி இல்லை என வேதனையுடன் பேசினார்கள். 

மேஜர் முகுந்த் பணியாற்றிய ராஷ்ட்ரிய ரைபிள் என்ற அந்த ஸ்பெஷல் ராணுவ பிரிவு தான் அதிரடி சண்டைக்களுக்கு செல்லும் முக்கியமான அணி. இந்த கதை பண்ணுவது என முடிவானதும் முகுந்த் வரதராஜனின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவரின் மனைவி, ராணுவ அதிகாரிகள் என பலரை சந்தித்து, ஏகப்பட்ட தகவல்களை திரட்டி தான் ஸ்கிரிட் எழுதினார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. நானும் முகுந்த் வரதராஜனின் பெற்றோர்களை சந்தித்து பேசி, நான் அவராக நடிக்கப் போகிறேன் என்று ஆசி வாங்கினேன். அவங்க உற்சாகம் கொடுத்து, ராணுவம் பற்றி பெருமையாக பேசினாங்க. என்னை அவர்கள் முகுந்த் என்றே அழைத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. முகுந்த் மனைவி இந்துவை சந்தித்து பேசினேன். அப்போது அவங்க மகள் உடன் இருந்தார். உன் அப்பா பற்றி உனக்கு அதிக தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. நீ சின்ன பெண். இந்த படத்தை பார், நிறைய விஷயங்களை புரிந்துகொள்வாய், அந்த அளவுக்கு நாங்க சிறப்பாக படம் கொடுத்து இருக்கிறோம் என நம்புகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தேன். 

நிஜ வாழ்க்கையில் முகுந்த் ரொம்ப ஜாலியான ஆளாகவும் இருந்துள்ளார், பார்ட்டிகளில் கலக்கியிருக்கிறார், ராணுவத்தில் அவரின் கோட்வேர்டு மேடி. அப்படிதான் அவரை அழைத்தார்கள். அவராக நடிக்க, என் அப்பாவின் பாடி லாங்குவேஜை பயன்படுத்தி இருக்கிறேன். சாய் பல்லவி, இந்துவாக வருகிறார். அவர் ஷாட்டுக்கு ஷாட் கவனம் செலுத்தி இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. அவரும் இந்து மேடத்தை சந்தித்துப் பேசினார். கடந்த வாரம் டில்லியில் ராணுவ அதிகாரிகள் படம் பார்த்தாங்க. இடைவேளையில் ஒரு ஆபீசர் ‘நீங்க தவறான துறையில் இருக்கீங்க, மிலிட்டரி வந்திடுங்க’ என்றார். படம் முடிந்தவுடன் இன்னொரு ஆஃபர், வாங்க, வந்து ஆர்மியில் சேருங்க என்றார்கள். அதை நான் பெருமையாக நினைக்கிறேன். என் நடிப்பு, படத்தின் கதை அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதில் மன நிறைவு. இந்த வார்த்தைகள் தான் எனக்கு விருது. மிலிட்டரில் பேட்ஜ் தயாரித்தவர் முதல்... அமரனில் வேலை செய்த அனைவருக்கும் இந்த பெருமை போய் சேரும் என்றார். 

மேலும், நான் மிலிட்டரி உடையில் இருக்கும் சில காட்சிகளை, சென்னை ஈசிஆரில் என் வீடு அருகே ஷூட் பண்ணினாங்க. அப்போது அதே கெட்டப்பில் வீட்டுக்குப் போனேன், என்னைப் பார்த்த அந்த நிமிடம் அம்மா ரொம்பவே எமோஷனல் ஆகிட்டாங்க. அப்பா நினைவு வந்ததுன்னு சொன்னாங்க, நானும் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். இந்தப் படத்தோட போட்டோ, வீடியோ, அப்டேட்டை என் மனைவி, மகளுக்கு காட்டிக்கிட்டே இருப்பேன். உங்க வழக்கமான பாணியை விட்டு வேறொரு விஷயத்தை ட்ரை பண்ணியிருக்கீங்க, நல்லா வந்துருக்குன்னு உற்சாகம் கொடுத்திட்டே இருந்தாங்க. இரண்டு பேரும் படம் பார்த்துவிட்டு பாராட்டினாங்க, குறிப்பாக, உங்களை அப்பாவாக நினைக்க பெருமைப்படுறேன்னு மகள் ஆராதனா சொன்னாள், அந்த நிமிடம் நானே உடைந்துவிட்டேன். என்னுடைய பல படங்கள் மகிழ்ச்சியாக முடியும். இந்த படத்தின் முடிவு அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட கதைகள், இந்தி, ஆங்கிலத்தில் அதிகம் வருகின்றன, கிளைமாக்ஸை அழுத்தமாக காட்டியிருக்கார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. 

கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேலாக ராணுவத்தினருடன் இருந்தேன். அவங்க சண்டையில் காயம் அடைந்தாலோ அல்லது இறந்து போனாலோ மட்டுமே நமக்கு அது செய்தியாக தெரியுது. அவங்க உலகம், அவங்க வேலை, கஷ்டம், அர்ப்பணிப்பு, தியாகம் இதெல்லாம் சில சதவீதம் கூட தெரியாது, அதை அவங்க வெளியே சொல்வதும் கிடையாது. அவங்களால நிம்மதியாக சாப்பிட, துாங்க முடியாது. பலர் உறுப்பு தியாகம், உயிர் தியாகம் வரைக்கும் கூட செய்றாங்க. நாம வீட்டுல, ஆபீசுல நிம்மதியாக இருக்கிற நேரத்துல, ஒரு மிலிட்டரி டீம் ஏதோ ஒரு ஆபரேஷனில் இருக்கலாம் அல்லது ரோந்து போயிட்டு இருக்கலாம், பயிற்சி எடுத்துகிட்டு, பாதுகாப்பு பணியில் இருக்கலாம். பனிமலையில், பாலைவனத்தில, வெயில், மழையில இறங்கி வேலை பார்க்கிறாங்க. சம்பளத்துக்காக இப்படி யாரும் வேலை செய்ய முடியாது. தேச பக்தனாக இருந்தால் மட்டுமே சாத்தியம்... அவங்களை நாம இன்னும் கொண்டாடணும்... அவங்க குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கணும். 

எஸ்.வி.சேகர் மகன் சினிமாவில் அறிமுகமான வேகம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நான் தொகுப்பாளர். அந்த நிகழ்ச்சியில் ரஜினி சார் வாய்ஸ்ல கமல் சாரை மேடையி்ல அறிமுகம் செய்தேன். அடுத்து சில விருது விழா மேடைகளில் தொகுப்பாளராக கமல் சார் முன்னிலையில் பேசியிருக்கிறேன். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த அமரன் படத்தில் நான் நடித்ததை என்னவென்று சொல்ல. இந்த படம் தொடர்பாக அவரை சில முறை சந்தித்து பேசியிருக்கிறேன். எப்போதும் நிறைய பேசும், நான் அவரிடம் மிக குறைவாகவே பேசினேன். அவருக்கு தெரியாத விஷயமல்ல, நாம ஏதாவது பேசி மாட்டிக்கொள்ளக் கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தேன். கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளர் ஆன பின்னர் அவருடனான நெருக்கம் இன்னும் அதிகமானது. அந்தப் படம் அவருக்கு ரொம்பவே பிடித்து இருந்தது, நல்ல முயற்சி என பாராட்டினார். நான் அமரன் படத்தை பார்க்கும் முன்பே அவர் பார்த்துவிட்டார். என்ன சொல்லப்போகிறாரோனு டென்ஷன்ல இருந்தேன். நல்லா இருக்குது நம்ம வேலையை சரியாக செஞ்சிருக்கோம்ன்னு சொன்னார், அதுவே எனக்கு கிடைத்த பெரிய விருது. 

தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்து டான் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறேன். இறுதிச் சுற்றி சுதா படம் பேச்சுவார்த்தையில உள்ளது. அடுத்து யார் பயோபிக்கில் நடிப்பது என்று இன்னும் யோசிக்கவில்லை. ஒவ்வொரு வெற்றிப் பெற்ற நடிகருக்கும், நபருக்கும் பெரிய பயணம் இருக்கிறது. அதில் உழைப்பு, கஷ்டம், நஷ்டம், வியூகம் என பல விஷயங்கள் உள்ளன. அதை மற்றவர்களால் எளிதில் பிடிக்க முடியாது. விஜய் சாருக்கு தனி பாணி, பாதை இருக்கிறது, அதை ரீ பிளேஸ் செய்ய முடியாது. அவர் இடத்தை என்னால் பிடிக்க முடியாது. அவர் இன்னொரு பாதையில் (அரசியல்) செல்கிறார், ஆனாலும் அவர் இடம் அப்படியே இருக்கும். நான் என் பாணியில் உழைக்கிறேன், வெற்றி அடைய போராடுகிறேன். எந்த காலத்திலும் மக்கள் எங்களுக்கு 5 ஹீரோ போதும், 10 ஹீரோ போதும்னு சொன்னது இல்லை. நல்லா நடிக்கிற, நல்ல படம் கொடுப்பவர்களை ஏற்றுக்கொண்டு, கொண்டாடுகிறார்கள். சினிமாவில் வெற்றி, தோல்வி மாறி, மாறி வரும். நம்ம பலத்தை தெரிந்துகொண்ட நாம உழைத்துக்கொண்டே இருக்கணும் என்றார். 

மேலும், விஜய்யுடன் கோட் படத்தில் நடித்தது குறித்து பேசிய விஜய், அவர் நடித்த துப்பாக்கி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அப்ப ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர். அவர் ஆபிசில் கொடுத்த டிக்கெட்டை எனக்கு கொடுத்தார். அப்ப, “இன்னிக்கு துப்பாக்கி வெச்சு இருப்பவர்களை விட துப்பாக்கி டிக்கெட் வைத்து இருப்பவர்கள் தான் கெத்துன்னு” டுவீட் போட்டேன். அப்படிப்பட்ட ரசிகன் நான், விஜய் சார் அன்புக்கு கோடான கோடி நன்றி. அவருடன் அந்தக் காட்சியில் நடித்தை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அன்றைக்கே அவரின் அரசியல் பயணத்துக்கு நான் நேரில சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டேன். அதேபோல், கொட்டுக்காளி படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், சூரி நடித்த கருடன் வெற்றி அடைந்தாலும், கொட்டுக்காளிக்கு 120 ஸ்கிரீன் போதும்னு சொன்னேன். சூரி மார்க்கெட்டை பயன்படுத்தி அதிக தியேட்டர் போட்டு இருந்தால், ஒரு நாளில் பெரிய வசூல் கிடைத்திருக்கும். படம் பார்த்த நான் அதை செய்ய விரும்பவில்லை, அந்த கதை எக்ஸ்பரிமன்டல்னு தெரியும். படம் பார்த்த 70 சதவீதம் பேர் பாராட்டினாங்க, 30 சதவீதம் பேர் விமர்சனம் செய்தாங்க. இப்ப ஓடிடியில் நல்லா போகுது. வருங்காலத்தில் இ்ப்படிப்பட்ட கதைகளுக்கு 100% ஆதரவு கிடைக்கும்னு நம்புகிறேன் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow