VidaaMuyarchi Shooting in Azerbaijan: அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி படப்பிடிப்பு கடந்தாண்டு தொடங்கியது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா தயாரிப்பில் அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் நான்-ஸ்டாப்பாக சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென இப்படத்தின் படப்பிடிப்பில் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில் அஜித் தனது அடுத்தப் படமான குட் பேட் அக்லியில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதனால் விடாமுயற்சி ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது.
லைகா நிறுவனத்தின் பட்ஜெட் பிரச்சினை காரணமாக தான் விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக விடாமுயற்சி மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்திருந்தது. இதனையடுத்து மீண்டும் அசுர வேகத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடங்கினார் மகிழ் திருமேனி. அஜித், த்ரிஷா ஆகியோரும் தங்களது கால்ஷீட்டை ஒதுக்கி விடாமுயற்சியில் நடித்து வந்தனர். இந்நிலையில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட மொத்த படக்குழுவும் ஷூட்டிங் பேக்கப் செய்தபடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் மட்டுமே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் அஜித்-த்ரிஷா போஸ்டரும் வெளியானது. இதன் தொடர்ச்சியாக விடாமுயற்சியில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சர்ப்ரைஸ்ஸாக அப்டேட் கொடுத்துள்ளது லைகா.

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதால், சீக்கிரமே படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயனின் அமரன் தீபாவளி ரிலீஸ் என படக்குழு அறிவித்துவிட்டது. இப்போதைக்கு சிவகார்த்திகேயனின் அமரன் மட்டுமே தீபாவளி ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. அதனால் அமரனுக்குப் போட்டியாக விடாமுயற்சி ரிலீஸாகுமா அல்லது வேறு தேதியை படக்குழு முடிவு செய்யுமா என்பது தெரியவில்லை.
இதனிடையே விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அனிருத் இசையில் வெளியாகும் இப்பாடல், விடாமுயற்சி படத்துக்கு ஹைப் கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். ஏனெனில் கமலின் இந்தியன் 2ம் பாகத்தில் அனிருத்தின் இசை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அனிருத்தின் இசை மட்டுமில்லாமல் இந்தியன் 2 படமே மொத்தமாக சொதப்பிவிட்டது தனி கதை. இந்நிலையில் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் இந்த இரண்டும் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.