Brother VS Bloody Beggar: நெகட்டிவ் விமர்சனம்... பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் கொடுத்த பிரதர், ப்ளடி பெக்கர்
ஜெயம் ரவியின் ப்ரதர், கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படங்கள், தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியாகின. இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றி இப்போது பார்க்கலாம்.
சென்னை: இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் படங்கள் வெளியாகின. இதில், அமரன், லக்கி பாஸ்கர் படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டி வருகின்றன. ஆனால், பிரதர், ப்ளடி பெக்கர் படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களுக்குமே பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன, ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ராஜேஷ் எம் இயக்கியுள்ள பிரதர், அக்கா – தம்பி பாசத்தை பின்னணியாக வைத்து ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் மூவியாக உருவாகியுள்ளது. ஜெயம் ரவியுடன் பூமிகா, ப்ரியங்கா மோகன், நட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஊட்டியில் டீச்சராக வேலை பார்க்கும் பூமிகாவுக்கு நட்டியுடன் திருமணம் நடைபெறுகிறது. அக்கா வீட்டுக்குச் செல்லும் ஜெயம் ரவியால், பூமிகாவுக்கும் நட்டிக்கும் இடையே பிரச்சினை வர, குடும்பமே பிரிகிறது.
பின்னர் தனது அக்கா பூமிகாவை அவரது கணவருடன் சேர்த்து வைப்பது தான் ‘பிரதர்’ ஜெயம் ரவியின் வேலை. ஃபேமிலி சென்டிமென்ட் ப்ளஸ் காமெடி என, பிரதர் படத்தை இயக்கியுள்ள ராஜேஷ் எம், கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரதர் திரைப்படம் முதல் நாளில் இரண்டரை கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், அடுத்தடுத்த நாட்களிலும் பிரதர் படத்தின் கலெக்ஷன் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
அதேபோல், கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ளடி பெக்கர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் ஏமாற்றமே எனத் தெரிகிறது. நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமரன் இயக்கியுள்ள ப்ளடி பெக்கர் படத்தில், கவின் பிச்சைக்காரனாக நடித்துள்ளார். உழைக்காமல் மற்றவர்களை ஏமாற்றி சம்பாதிக்க நினைக்கும் கவின், பிச்சைக்காரன் வேடம் போடுகிறார். அவருக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு மாளிகைக்குள் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது ஆசை. அப்படி கவின் ஆசைப்பட்ட மாளிகைக்குள் திருட்டுத்தனமாக என்ட்ரியாக, அங்கிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக்கொள்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் ஆள் மாறாட்டம் செய்ய வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. ப்ளடி பெக்கர் பார்த்த ரசிகர்கள், இது ஹாரர் ஜானரா அல்லது டார்க் காமெடி மூவியா..? எனத் தெரியாமல் குழப்பமாக இருப்பதாக விமர்சனம் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கவினின் ப்ளடி பெக்கர் மூவி, முதல் நாளில் 2.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு ஓரளவு நம்பிக்கை கொடுத்த கவின், ஸ்டார், ப்ளடி பெக்கர் மூலம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். ப்ளடி பெக்கர் படத்தின் முதல் வாரம் வசூல் 10 கோடியை தாண்டுவதே கஷ்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?