எதிர் நீச்சல் டூ மதராஸி... டைட்டில் பஞ்சத்தில் சிவகார்த்திகேயன்! இதுக்கு இல்லையா சார் ஒரு End?

சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தின் டைட்டில் மதராஸி என படக்குழு அறிவித்தது. இந்த டைட்டில் வெளியான அதேவேகத்தில், சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Feb 19, 2025 - 16:49
 0
எதிர் நீச்சல் டூ மதராஸி... டைட்டில் பஞ்சத்தில் சிவகார்த்திகேயன்! இதுக்கு இல்லையா சார் ஒரு End?
எதிர் நீச்சல் டூ மதராஸி... டைட்டில் பஞ்சத்தில் சிவகார்த்திகேயன்! இதுக்கு இல்லையா சார் ஒரு End?

சின்னதிரையில் இருந்து சினிமாவில் என்ட்ரியான சிவகார்த்திகேயன், இன்று யாருமே எதிர்பாராத உச்சம் சென்று கெத்து காட்டி வருகிறார். ஆரம்பத்தில் காமெடியனாகவும், காமெடி ஹீரோவாகவும் எட்டு வைத்த சிவகார்த்திகேயன், மிக குறுகிய காலத்திலேயே மாஸ் ஹீரோவாக ஆக்ஷனில் தெறிக்க விடுகிறார். சிவா நடிப்பில் கடைசியாக வெளியான அமரன், 100 நாட்கள் ஓடியதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடி வசூலித்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், சிவகார்த்திகேயனை சுற்றும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆரம்பத்தில் வாய்ப்புக் கொடுத்து வளர்த்துவிட்ட தனுஷ், இயக்குநர் பொன்ராம், தயாரிப்பாளர் RD ராஜா ஆகியோருடன் உரசல், இசையமைப்பாளர் டி இமான் சொன்ன குற்றச்சாட்டு என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சரி இதோடு முடிந்தது என பார்த்தால், இப்போது டைட்டில் பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. எப்போதுமே பழைய படங்களின் கதையை சுடுவது தான் திரையுலகில் வழக்கம். ஆனால், சிவகார்த்திகேயனோ பழைய ஹிட் படங்களின் டைட்டிலை சுடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஹீரோவாக சிவகார்த்திகேயனுக்கு ஓரளவு பெயர் வாங்கிக் கொடுத்த படம் எதிர் நீச்சல். இதே டைட்டிலில் 1968ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் எதிர் நீச்சல் என்றொரு படம் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது. இங்கிருந்து தான் பழைய சூப்பர் ஹிட் படங்களின் டைட்டிலை, தனது படங்களுக்கு வைக்கும் பழக்கத்தை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன்படி, கமலின் காக்கிச் சட்டை, ரஜினியின் வேலைக்காரன், மாவீரன், கார்த்திக்கின் அமரன் என வரிசையாக பழைய படங்களின் டைட்டிலில் நடிக்கத் தொடங்கினார். 

இந்த வரிசையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்துக்கு பராசக்தி எனவும், ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்துக்கு மதராஸி என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் பராசக்தி டைட்டில் பற்றி ஊருக்கே தெரியும். முக்கியமாக பராசக்தி டைட்டிலை, சிவகார்த்திகேயனுக்கு வழங்கக் கூடாது என சிவாஜி ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியது பஞ்சாயத்தில் போய் முடிந்தது. இதேபோல், அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தின் டைட்டிலை, தனது எஸ்கே 23 படத்துக்கு தட்டித் தூக்கியுள்ளார் சிவா. 

அமரன், பராசக்தி, மதராஸி என தொடர்ந்து கடைசி மூன்று படங்களுமே, பழைய டைட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மதராஸி உட்பட மொத்தமே 24 படங்களில் தான் நடித்துள்ளார் சிவா. அதிலும் 7 படங்களுக்கு பழைய டைட்டிலை வைத்தே சமாளித்துவிட்டார் சிவகார்த்திகேயன். இனிமேலாவது இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow