நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்ததும் அவருடன் இணைந்து பயணிப்பதில் மிகத் தீவிரமாக ஆர்வம் காட்டியது நாம் தமிழர் கட்சி. ”நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை, தன்னைப் போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை” என்று விஜய்யை தம்பி.. தம்பி என்று வாய் நிறைய அழைத்த சீமானுக்கு, வெற்றிக் கழக மாநாட்டில் கொள்கைகளை அறிவித்து பெப்பே காட்டினார் தவெக தலைவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அதன் முதல் மாநாட்டை நடத்திய விஜய், “திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்” என்று கூறியது, அண்ணன் சீமானின் நெஞ்சில் வடுவாக மாறியதாகக் கூறப்பட்டது.
தவெக மாநாட்டிற்கு பிறகு சீமான் ஏறிய ஒவ்வொரு மேடைகளிலும், “அண்ணன் என்ன, தம்பி என்ன, சொந்தமென்ன, பந்தமென்ன, சொல்லு நீ எனக்கு பதிலை” என்று குமுறியது தவெகவினரையே Slight ஆக feel செய்ய வைத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், இருங்க பாய் என்று தன் வேதனையை வன்மமாக சீமான் கக்கத் தொடங்கியதாகவும், அதன் வெளிப்பாடு தான் “லாரில அடிப்பட்டு தான் சாவ” என்று சபித்ததும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதனால் தவெக – நாதக கூட்டணி உருவாகும் என்று சொல்லப்பட்ட அனைத்து கணக்குகளையும் இந்த மோதல் பொய்யாக்கியது.
மாநாடு தொடங்கி ஆதவ் அர்ஜூனா விலகல் வரைக்கும் திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவிற்கு நேரடியாக பொதுமேடைகளில் தவெக அழைப்புவிடுத்தது என்றே சொல்லவேண்டும். “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு” என்று விசிகவிற்காக காய்களை நகர்த்திய விஜய், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாகி ஓரளவுக்கு வெற்றிக் கண்டதோடு, விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனாவின் ராஜினாமாவிற்கு பிறகு தவெகவிற்குள் இழுத்து அசர வைத்தார்.
இதனிடையே, தவெக – அதிமுக கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அதிமுகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக ஒருபக்கம் போராடி வரும் நிலையில், தவெக உடன் ரகசிய பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஒருவேளை இந்த கூட்டணி வெற்றிப்பெற்றால் துணை முதலமைச்சர் பதவி தவெகவிற்கு கொடுக்கப்படும் என்று அதிமுக தலைமை பனையூருக்கு தூது அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு தவெக தரப்பு அசைந்து கொடுக்கவில்லை என்றும், தேர்தலில் ”வெற்றி பெற்றால் விஜய் தான் முதலமைச்சர்... அல்லது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முதல்வர் என அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகைக்கு பதில் அனுப்பப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி அதிமுக – தவெக கூட்டணி உறுதியாவதில் இழுபறி நீடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது முதல் கூட்டணி கட்சியை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான புகைப்படும் மட்டும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.. இதனிடையே
தங்கள் முதல் கூட்டணி கட்சியை உறுதி செய்துள்ள தவெக, திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இன்னும் சில சில சின்ன கட்சிகளையும் அரவணைக்க தயாராகியுள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திலேயே திராவிட கட்சிகளை ஆட்டம் காண வைத்த விஜய், தற்போது கூட்டணிக்கான ஆட்டத்தை தொடங்கியுள்ளது என்ன மாதிரியான பிரச்னைகளை உருவாக்கப்போகிறது? இதனை விஜய் எளிதில் சமாளிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.