தப்புமா சபாநாயகர் பதவி? அப்பாவு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய EPS

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு-வினை பதவி நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Mar 17, 2025 - 11:36
 0
தப்புமா சபாநாயகர் பதவி? அப்பாவு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய EPS
தப்புமா சபாநாயகர் அப்பாவு பதவி?

சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பாவு சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி சட்டப் பேரவையின் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். 

அதனைத் தொடர்ந்து தீர்மானத்தை முன்மொழிந்த அதிமுக தரப்பில் உரையாற்றிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் அப்பாவு மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு- “ பேரவை தலைவரின் நாற்காலி மிகவும் புனிதமானது. பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து பேரவை தலைவருடைய இருக்கையில் அமர வைப்பார்கள். எனவே பேரவை தலைவர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது.”

“சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது நேரலை வழங்கப்படுவதில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்த காரணத்தினால் அவர்களை நேரலையில் காட்டாமல் பாரபட்சமாக செயல்பட்டுள்ளார் சபாநாயகர். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பலமுறை சுட்டிக்காட்டி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவது தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுகிறது” என அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

குறுக்கிட்டு கருத்து தெரிவித்த முதல்வர்:

சபாநாயகர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவர் செய்த தவறுகள் தொடர்பாக மட்டும்தான் இந்த தீர்மானத்தின் மீது பேச வேண்டும் எனவும் கடந்த கால வரலாறுகளை பேசக்கூடாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கருத்து தெரிவித்தார். இதற்கு, ”அப்பாவு மீது தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு வெறுப்பும் எனக்கு கிடையாது. சபாநாயகராக அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் நடுநிலையோடு செயல்படவில்லை” என்பதே நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு” என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார். 

தொடர்ந்து சபாநாயகர் நீக்கம் தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம் நடைப்பெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow