முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில்  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

Mar 14, 2025 - 20:50
Mar 14, 2025 - 20:58
 0
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!

பல்வேறு நிகழ்வுகளில் நடைபெற்ற  கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன . 

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த மனுக்கள் நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது சிவி சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், எதிர்கட்சி என்ற அடிப்படையில்  ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே பேசியதாகவும் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை வழக்கறிஞர் கே எம் டி முகிலன், விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சிவி சண்முகம் பயன்படுத்துவதாகவும் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அது போன்ற கருத்துகளை பேசுவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில்  சிவி சண்முகம் கவனமாக பேச வேண்டுமென கூறிய நீதிபதி  எதிர்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவாக்கேலி உள்ளிட்டவை கூடாது என நீதிபதி தெரிவித்தார். 

சிவி சண்முகம் தொடர்ச்சியாக ஏன் இப்படி பேசுகிறார் எனக்கேள்வி எழுப்பிய நீதிபதி  அனைத்துக்கும் ஒரு எல்லை உள்ளதாக கூறினார். பொதுவெளியில் பேசும் போது வரைமுறையுடன் பேச வேண்டும் என்றார்.

இதனையடுத்து சிவி சண்முகம் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக கூறிய நீதிபதி இது தொடர்பாக விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் சிவி சண்முகம் இவ்வாறு பேசாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக்கூறிய நீதிபதி மீண்டும் அதனை மீறினால் வழக்கை சந்தித்து தான் ஆக வேண்டுமெனவும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow